வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசாங்கம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் விமானச் சேவைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாவது நாளாக சனிக்கிழமை (நவம்பர் 8) அன்று 1,460க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அரசாங்கம் முடக்கம் தொடர்வதால் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கவலைகள் காரணமாக நாற்பது முக்கிய விமான நிலையங்களில் தினசரி 4 விழுக்காடு விமானச் சேவைகளை குறைக்குமாறு விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (எஃப்ஏஏ) அறிவுறுத்தியது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு வாரக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை. இதையொட்டி ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு விமானச் சேவைகள் குறைக்கப்படுகின்றன.
நவம்பர் 11ஆம் தேதி விமானச் சேவைகள் நான்கு விழுக்காடு வரை குறைக்கப்படவிருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி அது 10 விழுக்காடாக அதிகரிக்கும்.
நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களிலும் இதர மையங்களிலும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பிரச்சினை நீடிப்பதாக சனிக்கிழமை (நவம்பர் 8) எஃப்ஏஏ தெரிவித்தது. இதில் அட்லாண்டா, நுவார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, நியூயார்க் உள்ளிட்ட விமான நிலையங்களும் அடங்கும்.
அதே நாளில் எஃப்ஏஏ பல விமான நிலையங்களில் களப்பணிகளை தாமதப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது. இதனால் அமெரிக்காவின் மிக பரப்பரப்பான விமான நிலையங்களில் ஒன்றான அட்லாண்டாவில் விமானச் சேவைகள் 337 நிமிடங்கள் தாமதமாகும்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த வெள்ளிக்கிழமை 7,000 விமானங்கள் தாமதமாயின, 1,025 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன. மறுநாளான சனிக்கிழமை 5,450 விமானங்கள் தாமதமாயின.
விமானங்களின் குறைப்பு நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 6.00 மணிக்குத் (சிங்கப்பூர் நேரம் மாலை 7.00 மணி) தொடங்கியது. இவற்றில் ஆகப் பெரிய விமான நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், யுனைட்டெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்டைவை பாதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்துக்கு நிதி ஒதுக்குவதில் டிரம்ப்பின் குடியரசுக்கு கட்சிக்கும் எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதன் தொடர்பான பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

