கோலாலம்பூர்: சீனா முதல் ஐரோப்பா, அமெரிக்கா எனப் பல நாடுகளில் மலேசியாவின் டுரியான் பழங்கள் உலக அளவில் பிரபலமடைந்துள்ளன. இதனால் டுரியானுக்கான தேவையும் பல மடங்கு கூடியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவில் டுரியான் ஏற்றுமதியும் விரிவடைந்துள்ளது. மேலும் டுரியான் சாகுபடியும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
2020ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் ஐரோப்பிய நாடுகளுக்கான டுரியான் ஏற்றுமதி 162 விழுக்காடு கூடியுள்ளது. அதேபோல் வட அமெரிக்க நாடுகளுக்கான மலேசிய டுரியான் ஏற்றுமதி 5.2 விழுக்காடு உயர்ந்தது. மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி 8.8 விழுக்காடு அதிகரித்தது.
இந்தத் தரவுகளை மலேசியாவின் வேளான் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் முகம்மது சாபு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
“உயர்ரக டுரியான் பழங்களுக்கான தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மூசாங் கிங் டுரியானை மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்,” என்று அமைச்சர் சாபு குறிப்பிட்டார்.
டுரியான் ஏற்றுமதியை அதிகரிக்கவும் பழம் தொடர்பான விளம்பரத்தை மக்களுக்குக் கொண்டு செல்வதையும் மலேசிய அரசாங்கம் தொடர்ந்து செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு சீனாவுக்கு மட்டும் 367.4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான டுரியான் பழங்களை மலேசியா ஏற்றுமதி செய்துள்ளது.
அதேபோல் ஹாங்காங்கிற்கு 31.3 மில்லியன் வெள்ளி, சிங்கப்பூருக்கு 23.5 மில்லியன் வெள்ளி, இந்தோனீசியாவுக்கு 18 மில்லியன் வெள்ளி, அமெரிக்காவுக்கு 11 மில்லியன் வெள்ளி மதிப்பிலான டுரியான் பழங்களை மலேசியா ஏற்றுமதி செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2020ஆம் ஆண்டு மலேசியாவின் மொத்த டுரியான் ஏற்றுமதி 176.7 மில்லியன் வெள்ளி. 2024ஆம் ஆண்டு அது 367 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது.
பழங்களின் அரசன் என்ற அழைக்கப்படும் டுரியானை மலேசியா 40க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
கனடா, ஜப்பான், தென்கொரியா, கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் டுரியானை இறக்குமதி செய்கின்றன.
மலேசியாவில் 1,933 டுரியான் தோட்டங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

