காஸா: இஸ்ரேல் காஸாவில் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதால் பாலஸ்தீன மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி கிடைத்து வருகிறது.
இஸ்ரேலியப் படைகள் மீட்டுக்கொள்ளப்பட்டதால் தங்களது வீடுகளுக்குக் காஸா மக்கள் திரும்பி வருகின்றனர்.
இருப்பினும் பாலஸ்தீன மக்கள் வாழ்ந்த பெரும்பாலான வீடுகளும் கட்டடங்களும் தற்போது இடிபாடு சிதைவுகளாக மாறியுள்ளன. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
சனிக்கிழமை (அக்டோபர் 11), அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மருமகன் ஜரேட் குஷ்னர் காஸாவுக்குச் சென்று பார்வையிட்டார். அவருடன் சில முக்கிய அதிகாரிகளும் இருந்தனர்.
திரு டிரம்ப்பின் மகள் இவான்கா இஸ்ரேலுக்குச் சென்று பிணைக் கைதிகளின் குடும்பத்தினரைச் சந்தித்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்துலக உச்சநிலை மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தவுள்ளார். அவருடன் எகிப்து அதிபர் அப்தெல் ஃபாட்டே அல் சிசியும் இணைந்து மாநாட்டைத் தலைமை தாங்குகிறார்.
உச்சநிலை மாநாடு திங்கட்கிழமை (அக்டோபர் 12) பிற்பகல் எகிப்தில் நடக்கவுள்ளது. அதில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன. ஹமாஸ் படை இதில் கலந்துகொள்ளாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநிலை மாநாட்டின் முக்கிய நோக்கம் காஸாவில் போரை நிறுத்துவது, மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை கொண்டு வருவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் டிரம்ப்பின் மத்தியக் கிழக்குப் பயணம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி உடன்பாட்டின்படி பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“உடன்பாட்டில் குறிப்பிட்டது போல் அக்டோபர் 13ஆம் தேதி காலைப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதேபோல் இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்,” என்று ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காஸாவில் ஹமாஸ் போராளிகளின் ஆதிக்கம் இருக்கக் கூடாது அதுதான் நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்கும் என்று கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் படையினர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
அதையடுத்து காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் 67,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.