ஜோகூர் பாரு: மலேசியாவின் வாகன நுழைவு உரிமம் (விஇபி) முறை செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முழுமையாக நடப்புக்கு வந்தது. விஇபி முறை நடப்புக்கு வந்த முதல் ஒரு மணி நேரத்தில் பத்து சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணிக்கு (திங்கட்கிழமை இரவு) மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத்துறையைச் சேர்ந்த 55 அதிகாரிகள் சுல்தான் இஸ்கந்தர் சுங்கைத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகத்துக்கு அருகில் உள்ள சாலையில் பணியமர்த்தப்பட்டனர்.
புதிய விதிமுறைக்கு உட்படாத கார்களை அவர்கள் ஓரங்கட்டினர்.
இதையடுத்து ஜோகூர் கடற்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பதிவு செய்யப்பட்டு, செயல்பாட்டில் உள்ள விஇபி ஒட்டுவில்லை இல்லாத வெளிநாட்டு தனியார் கார்களின் ஓட்டுநர்களுக்கு 300 ரிங்கிட் (S$91) அபராதம் விதிக்கப்படும்.
அபராதத் தொகையைச் செலுத்திய பிறகே அவர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறலாம்.
விஇபி முறை 2024ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், அப்போது விஇபி ஒட்டுவில்லை இல்லாமல் மலேசியாவுக்குள் நுழைந்த வெளிநாட்டு கார் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது விஇபி முறை முழுமையாக நடப்புக்கு வந்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அதிகாலை விஇபி ஒட்டுவில்லை இன்றி மலேசியாவுக்கு கார் ஓட்டிச் சென்ற சில சிங்கப்பூரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“கார்களில் விஇபி ஒட்டுவில்லை உள்ளதா என்பதை உறுதி செய்ய மலேசிய அதிகாரிகள் சோதனையிடுவர் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் பேரளவில் சோதனையிடுவர் என எதிர்பார்க்கவில்லை,” என்று 19 வயது சஃபிர் ஃபர்ஹான் தெரிவித்தார்.
“விஇபி ஒட்டுவில்லைக்குப் பதிவு செய்துவிட்டேன். அது எனக்குக் கூடிய விரைவில் விநியோகம் செய்யப்படும்,” என்று மலேசிய சாலைப் போக்குவரத்துத்துறையிடமிருந்து பெற்றுக்கொண்ட கடிதத்தை அவர் ஸட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களிடம் காட்டினார்.
இவர், விஇபி ஒட்டுவில்லை இல்லாமல் மலேசியாவுக்குள் கார் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் நபர்.
திங்கட்கிழமையன்று (ஜூன் 30) இரவு 8.30 மணி அளவில், ஜோகூர் பாருவில் உள்ள டாங்கா பே பகுதியில் உள்ள விஇபி நிலையத்திற்குச் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது விஇபி ஒட்டுவில்லைக்குப் பதிவு செய்ய உதவி கேட்டு சிங்கப்பூரர்கள் பலர் வரிசையில் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.