ஜப்பானில் ஆழ்துளைக்குள் விழுந்த நான்கு ஊழியர்கள் மரணம்

1 mins read
07974db3-97a2-4ab7-ba26-e957a6560c0f
ஆழ்துளையைக் காட்டும் மாதிரிப் படம். - படம்: பிக்சாபே

தோக்கியோ: ஜப்பானில் பாதாளச் சாக்கடைக் குழாய்களை ஆய்வு செய்துகொண்டிருந்த நான்கு ஊழியர்கள் ஆழ்துளைக்குள் விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்தனர். தலைநகர் தோக்கியோவுக்கு வடக்கே ஜியோடா நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

ஒருவர் ஆழ்துளைக்குள் விழுந்ததும், அவரைக் காப்பாற்ற மூன்று பேர் இறங்கியபோது அவர்களும் அதில் விழுந்துவிட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

மீட்புப் பணியின்போது, அந்த ஆழ்துளையிலிருந்து அதிக செறிவுள்ள ஹைட்ரஜன் சல்ஃபைட் வாயு வெளிவந்ததை மீட்புப் படையினர் கண்டறிந்தனர். இந்த வாயு அதிக அளவில் நச்சுத்தன்மை கொண்டது.

இந்த விபத்து குறித்துப் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத ஜியோடா நகர அதிகாரி ஒருவர், “விபத்துக்கான விரிவான சூழ்நிலைகள் இன்னும் தெரியவில்லை. எனவே, எங்கள் பொறுப்பு குறித்து எதுவும் கூறுவது இது சரியான தருணமன்று,” என்றார்.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, நான்கு ஊழியர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கழிவுநீர், கழிவுகளைச் சுத்தம் செய்ய ஏறத்தாழ 10 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்