தோக்கியோ: காற்சட்டைகளில் எட்டுக் கிலோ தங்கப் பொடியை மறைத்து வைத்துக் கடத்த முயன்றதாக ஹாங்காங்கிலிருந்து வந்த நால்வரை ஜப்பானியக் காவல்துறை கைதுசெய்தது.
அவற்றின் மதிப்பு 98.7 மில்லியன் யென் (S$845,000) எனக் கூறப்பட்டது.
இக்கடத்தல் முயற்சி கடந்த 2024 ஜூலை மாதம் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றி செவ்வாய்க்கிழமைதான் (அக்டோபர் 21) தகவல் வெளியானது.
மசமோரி நிஷிமுரா, 34, என்பவரே இக்கடத்தல் முயற்சியின் மூளையாகச் செயல்பட்டவர் எனச் சொல்லப்படுகிறது. அவரது அறிவுறுத்தலின்பேரில், 20களிலும் 30களிலும் இருந்த மூன்று பெண்கள் தங்கப் பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்த காற்சட்டைகளை அணிந்து சென்றதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்நால்வரும் தங்கள்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். தங்கக் கடத்தலுக்காக நிஷிமுராதான் தம்மை வேலைக்கு எடுத்ததாக அம்மூன்று பெண்களில் ஒருவர் கூறினார்.
அம்மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் பணத்திற்காகவும் பயணச் செலவுகளுக்காகவும் தங்கம் கடத்தும் திட்டத்தில் அவர்கள் இணைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிஷிமுராவின் அறிவுறுத்தலின்பேரில் ஹாங்காங்கிலுள்ள இன்னோர் ஆடவரிடமிருந்து தங்கப் பொடி மறைத்துவைக்கப்பட்ட காற்சட்டைகளை அவர்கள் பெற்றதாக நம்பப்படுகிறது.
அவர்கள் நால்வரும் தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில் திங்கட்கிழமை கைதாயினர். அவர்கள் வரி ஏய்ப்பு செய்த தொகை 9.87 மில்லியன் யென்.
தொடர்புடைய செய்திகள்
சுங்கத்துறையினர் இந்த வழக்கைக் காவல்துறையிடம் ஒப்படைத்ததை அடுத்து, காவல்துறையினர் அந்நால்வரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கத்தின் விலை தொடர்ந்து கூடி வருவதை அடுத்து, ஜப்பானில் தங்கக் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.