டெல் அவிவ்: இஸ்ரேலிய ராணுவத்தின் முன்னாள் மூத்த வழக்கறிஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலியப் படையினரின் பிடியிலிருந்த பாலஸ்தீனக் கைதி ஒருவர் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதைக் காட்டுவதாகக் கூறப்பட்ட காணொளி கசிந்ததன் தொடர்பில் அந்த வழக்கறிஞர் கைதானார். இஸ்ரேலியத் தற்காப்புப் படையின் ராணுவத் தலைமை வழக்கறிஞரான மேஜர் ஜெனரல் இஃபாட் டொமெர்-எருஷல்மி சென்ற வாரம் பதவி விலகினார். காணொளி கசிந்ததற்கு முழுப் பொறுப்பேற்பதாக அவர் சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) அவரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தலைநகர் டெல் அவிவுக்கு வடக்கே உள்ள கடற்கரையில் காவல்துறையினர் மணிக்கணக்கில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அவர் நலத்துடன் இருந்தார் என்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்தது.
காணொளி கசிந்த விவகாரம் இஸ்ரேலிய அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இஸ்ரேலியச் செய்தி ஒளிவழியில் அது ஒளிபரப்பப்பட்டது. நாட்டின் தென்பகுதியில் உள்ள ஸ்டே டேய்மேன் ராணுவத் தளத்தில் போர்க்காலப் படை வீரர்கள், கைதியைச் சுற்றித் தடுப்புகளை அமைத்திருந்ததைக் காணொளி காட்டுகிறது. உள்ளுக்குள் அவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும் கூர்மையான பொருளைக் கொண்டு ஆசனவாயில் குத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கடும் காயங்களுக்காக அவருக்குப் பின்னர் சிகிச்சை வழங்கப்பட்டது.
தடுப்புக்காவலில் இருந்தபோது போர்க்காலப் படைவீரர்கள் ஐவர், முரட்டுத்தனமாகத் தாக்கியதாகவும் அவருக்குக் கடும் காயங்களை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
போர்க்காலப் படைவீரர்களின் வழக்கறிஞர், வழக்குத் தவறானது, திரிக்கப்பட்டது, ஒருதலைப்பட்சமானது என்றுகூறி அதனைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காணொளி கசிந்ததன் தொடர்பில் சென்ற வாரம் குற்றவியல் புலனாய்வு தொடங்கப்பட்டுள்ளது.
காஸாவிலிருந்து பிடிக்கப்பட்ட பிள்ளைகளும் பெரியவர்களும் தடுப்புக்காவலில் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விசாரணைக் குழுவின் அறிக்கையொன்று குறிப்பிட்டிருந்தது.
இஸ்ரேலிய அரசாங்கம் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது. அனைத்துலகச் சட்டதிட்டங்களின் தரநிலைகளில் முழுமையாய்க் கடப்பாடு கொண்டிருப்பதாக அது சொன்னது.

