இஸ்ரேலியத் தாக்குதல் ரகசியத்தை வெளியிட்ட முன்னாள் சிஐஏ அதிகாரிக்கு சிறை

1 mins read
530b385d-3208-4e5c-b942-038dfb7af533
அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பின் (சிஐஏ) சின்னம். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்தவிருந்த பதில் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் ஆக ரகசியமான உளவுத்துறைத் தகவல்களைக் கொண்ட ஆவணங்களை வெளியிட்ட முன்னாள் மத்திய உளவுத்துறை அமைப்பு (சிஐஏ) அதிகாரிக்கு 37 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான 34 வயது ஆசிஃப் ரகுமானுக்கு புதன்கிழமை (ஜூன் 11) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க சட்ட அமைச்சு தெரிவித்தது.

ஆசிஃப் ரகுமான் 2016ஆம் ஆண்டு முதல் மத்திய உளவுத்துறை அமைப்பில் பணியாற்றிவந்தார். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அவரை அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) கம்போடியாவில் கைது செய்தது.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ரகுமான், தேசியத் தற்காப்புத் தகவல்களை வேண்டுமென்றே தானே வைத்துக்கொண்டது, அவற்றை வெளியிட்டது என தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளைக் கடந்த ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டார். அதிகபட்சமாக 20 ஆண்டு சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஈரான் ஆதரவில் இயங்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக ஈரான், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி இஸ்ரேல் மீது 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

அதற்குப் பதிலடியாக அக்டோபர் பிற்பகுதியில் இஸ்ரேல், ஈரானில் ராணுவப் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தியது.

குறிப்புச் சொற்கள்