ஹனோய்: வியட்னாமைப் பாதித்துள்ள மோசமான வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 13க்குக் கூடியுள்ளது.
மேலும் 11 பேரைக் காணவில்லை. அந்நாட்டு அரசாங்கம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) இத்தகவல்களைத் தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத மழைப் பொழிவால் மத்திய வியட்னாமில் கடந்த சில நாள்களாகப் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யுனெஸ்கோ மரபுடைமைப் பட்டியலில் இடம்பெறும் முந்தைய தலைநகரமான ஹியூ, பழம்பெரும் நகரான ஹொய் ஆன் ஆகியவை வெள்ளத்தால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அவ்விரு நகரங்களின் பெரும்பாலான பகுதிகளும் நீரில் மூழ்கியிருப்பது வியட்னாமிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில் தெரிந்தது. அதிலும் சில வீடுகள் கூரை வரை நீரில் மூழ்கியது காணப்பட்டது.
வியட்னாம், வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகம் எதிர்நோக்கும் நாடாகும். குறிப்பாக ஜூனிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் இந்நிலை ஏற்படுகிறது. இந்தக் காலகட்டம், புயல்கள் அதிகம் வீசக்கூடிய காலமாகும்.
வெள்ளம் இதுவரை 116,000க்கும் அதிகமான வீடுகளைப் பெரிய அளவில் பாதித்துள்ளது, 5,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்களை நாசப்படுத்திவிட்டது. சாலைகள், ரயில் பாதைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன, பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று வியட்னாமிய பேரிடர் அமைப்பு அறிக்கையில் தெரிவித்தது.

