பேங்காக்: தாய்லாந்தின் சியாங் ராய் மாநிலம் கடும் வெள்ளத்தை எதிர்நோக்குகிறது.
வியாழக்கிழமை (ஜூன் 26) இரவு முழுவதும் பெய்த கனமழை மறுநாள் காலையும் தொடர்ந்தது. அதனால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது, பல மாவட்டங்களில் மலைகளிலிருந்து நீர் புரண்டோடியது. ஃபாயா மெங்கிராய், வியாங் சாய் ஆகியவை ஆக மோசமாக பாதிக்கப்பட்டன.
அதிக அளவில் மழை நீர் மலைகளிலிருந்து சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளுக்கு வேகமாக வழிந்தது. அதன் காரணமாக நீரின் அளவு திடீரென அதிகரித்தது, பல இடங்கள் நெருக்குதலுக்கு உள்ளாயின.
குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் பொருள்களை மேட்டுப் பகுதிகளுக்கு மாற்றவேண்டியிருந்தது.
பல இடங்களில் வெள்ளநீர் உடலின் இடைப் பகுதி வரை இருந்தது. அலைமோதிய நீர் வீடு/கட்டடங்களைச் சேதப்படுத்தியதோடு பலரின் உடைமைகளை அடித்துச் சென்றது.
உள்ளூர் சமூகங்கள், வாழ்வாதாரத்துக்காக நம்பியிருக்கும் வேளாண் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்கள் நீரில் மூழ்கின.
தாய்லாந்தின் பேரிடர் தடுப்பு, தவிர்ப்புப் பிரிவு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து கைப்பேசிகள்வழி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டது.