இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்யும் பருவமழையினால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
துயர்துடைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், மழைப்பொழிவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 24,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டமானது அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். பல்வேறு இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.