லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து புறப்பட்ட விமான இயந்திரத்தில் தீ

1 mins read
2f52fcbd-aebe-4e28-8d9d-254b294b90aa
லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து அட்லாண்டா நகருக்குச் சென்றுகொண்டிருந்த டெல்ட்டா டிஎல் 446 விமானத்தின் இடது இயந்திரத்தில் தீ மூண்டது. - படம்: ஆர்டி இந்தியா நியூஸ்/ எக்ஸ்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து அட்லாண்டா நகருக்குச் சென்றுகொண்டிருந்த டெல்டா டிஎல் 446 விமானத்தின் இடது இயந்திரத்தில் தீப் பிடித்ததை அடுத்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

போயிங் 767-400 ரக விமானம் லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரக் கோளாறு குறித்த எச்சரிக்கை சமிக்‌ஞைகளை விமானிகள் கண்டனர். விமானிகள் உடனடியாக செயல்பட்டதாக டெல்டா விமான நிறுவனம் குறிப்பிட்டது.

அவசரநிலையை அறிவித்த விமானிகள் விமான நிலையத்துக்கு உடனடியாகத் திரும்பும்படி கேட்டுக்கொண்டனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவசரநிலை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தது.

லாஸ் ஏஞ்சலிஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தின் இடது இயந்திரத்திலிருந்து தீப்பொறி வருவதைக் காணொளிகள் காட்டுகின்றன.

பசிபிக் பெருங்கடல் மேல் முதலில் பறந்த விமானம் டௌனி, பேரமவுண்ட் வழியாக மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்பியது. பாதுகாப்புச் சோதனைகளை நடத்தவும் தரையிறங்க தயாராகவும் விமானிகளுக்கு அது நேரம் கொடுத்தது.

பயணிகளுக்கோ விமான சிப்பந்திகளுக்கோ காயம் இன்றி விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

தீ மூண்டிருக்கக்கூடும் என்று விமானத்திலிருந்த பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் தீ மூண்டதற்கான காரணம் குறித்த அதிகாரபூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டில் இரண்டாவது முறையாக டெல்டா விமானத்தின் இயந்திரத்தில் இவ்வாறு தீ மூண்டது.

ஜனவரி 1ஆம் தேதி சாவ் பாவ்லோவிற்குச் சென்றுகொண்டிருந்த டிஎல் 105 டெல்டா விமானத்தில் தீ மூண்டதை அடுத்து விமானம் அட்லாண்டாவிற்குத் திரும்பியது.

குறிப்புச் சொற்கள்