கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நகர மண்டபம், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் ஆகிய பகுதிகளைச் சுற்றி உரிமம் இன்றி புகைப்படச் சேவைகள் வழங்கிய 22 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) இரவு நடத்திய அதிரடிச் சோதனையில் அந்த 22 பேரும் சிக்கினர்.
கோலாலம்பூர் அதிரடிச் சோதனை நடவடிக்கை இரவு 9 மணிக்குத் தொடங்கி 11.15 மணிக்கு முடிவுற்றது.
அதில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைச் சுற்றி இடம்பெற்ற உரிமமில்லா வர்த்தக நடவடிக்கைகள் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரிமமில்லாமல் புகைப்படச் சேவை வழங்கியோரின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அதிகாரிகள், அபராதம் செலுத்தப்பட்ட பிறகு உரிமையாளர்கள் அவற்றைத் திரும்பப் பெறலாம் என்று குறிப்பிட்டனர்.
சோதனைக்கு உள்ளான அனைவரும் மலேசியர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உணவங்காடிக் கடைக்காரர்களுக்கான சட்டத்தின்கீழ் இத்தகைய உரிமமில்லா செயல்களுக்கு அதிகபட்சம் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் தீவிரச் சோதனைகள் தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இரட்டைக் கோபுரத்தைப் பின்புறக் காட்சியாக வைத்து புகைப்படம் எடுக்க உள்ளூர்வாசிகள் ஐந்து ரிங்கிட்டும் வெளிநாட்டினர் பத்து ரிங்கிட்டும் கொடுத்தனர்.

