பெய்ஜிங்: சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகளில் கலந்துரையாடலுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 15), சீன அதிபரை அவர் சந்தித்துப் பேசினார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் என்ற முறையில் திரு அல்பனிஸ் இரண்டாவது முறையாகச் சீனாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், அண்மையில் உறுதிசெய்யப்பட்ட வர்த்தக உறவுகளைப் பேணுவது அவரது பயணத்தின் நோக்கம்.
கடந்த பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சற்றே மோசமாக இருந்தது. தேசியப் பாதுகாப்பு, பசிபிக் வட்டார நலன் குறித்த விவகாரங்களில் இருதரப்புக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின.
கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய ‘ராக் லாப்ஸ்டர்’ வகை இறால் மீதான இறக்குமதித் தடையைச் சீனா விலக்கியதை அடுத்து இருதரப்பு உறவுகள் மேம்பட்டன.
சீன அதிபருடனான சந்திப்பில், ஆஸ்திரேலியாவின் கண்ணோட்டம், நலன்கள் குறித்து எடுத்துரைக்கும் வாய்ப்பை வரவேற்பதாகத் திரு அல்பனிஸ் கூறினார்.
“சீனாவுடனான உறவை ஆஸ்திரேலியா மதிக்கிறது. ஆஸ்திரேலிய நலனை முன்னிறுத்தி, அமைதியான, நீடித்த முறையில் இருதரப்பு உறவைத் தொடர்ந்து அணுக விரும்புகிறது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“இரு நாடுகளுக்கும், வட்டார வளப்பம், நிலைத்தன்மைக்கும் முக்கியமான விவகாரங்களில் நேரடிக் கலந்துரையாடல்களை நிகழ்த்துவது அவசியம். நாம் இருவரும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, இரு நாட்டு உறவில் கலந்துரையாடல் முக்கிய இடம் பெறவேண்டும்,” என்று திரு ஸியிடம் திரு அல்பனிஸ் கூறினார்.
சீன - ஆஸ்திரேலிய உறவுகள் மேம்பட்டதால் விளையக்கூடிய நன்மைகளை அதிபர் ஸி பாராட்டினார். இருதரப்பு உறவு பின்னடைவுகளைக் கடந்து முன்னேற்றப் பாதையில் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
“அனைத்துலகச் சூழல் எத்தகைய மாற்றத்தைச் சந்தித்தாலும், இரு நாடுகளும் உறுதியுடன் இந்தப் பாதையில் தொடரவேண்டும்,” என்று சீன அதிபர் வலியுறுத்தினார்.

