வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படவேண்டும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) கூறினார்.
லாஸ் ஏஞ்சலிஸ், சிகாகோ, நியூயார்க் போன்ற நகரங்களுக்கும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவேண்டும் என்று அவர் சொன்னார். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிரான அவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
“இந்நடவடிக்கைக்காக முடிந்தவரை எல்லா வளங்களையும் ஒதுக்குமாறு எனது அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, லாஸ் ஏஞ்சலிசில் நடப்பில் இருக்கும் ஊரடங்கு மேலும் இரு நாள்களுக்குத் தொடரும் என்று அந்நகர மேயர் கேரன் பாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்பதாவது நாளாக, டிரம்ப் அரசாங்கம் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறப்படுவோர் மீது எடுத்துவரும் நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.
இம்மாதம் ஆறாம் தேதியன்று லாஸ் ஏஞ்சலிசில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. ஆர்ப்பாட்டங்களைக் கையாள திரு டிரம்ப் 4,000 தேசியக் காவற்படையினரையும் 700 மரின்ஸ் எனப்படும் தேசியப் போர்ப் படையினரையும் பணியில் ஈடுபடுத்தினார்.