100வது பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் மகாதீருக்கு திடீர் சோர்வு

2 mins read
fa84eddf-43d7-4687-b21c-fec57e376d93
டாக்டர் மகாதீருக்கு சோர்வு ஏற்பட்டதால் அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

தமது 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோர்வடைந்த டாக்டர் மகாதீர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவின் பிரதமராகப் பொறுப்பு வகித்த டாக்டர் மகாதீருக்கு இதயக் கோளாறு இருந்தது. அவர் இதய அறுவைச் சிகிச்சைக்கும் சென்றிருந்தார். அண்மை ஆண்டுகளில் அவர் அடிப்படி மருத்துவமனையில் சேர்கப்பட்டார்.

கோலாலம்பூரின் தேசிய இதயக் கழகத்தில் கண்காணிக்கப்பட்ட அவர், உள்ளூர் நேரப்படி 4.45 மணிக்கு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை (ஜூலை 13) 100வது பிறந்த நாளைக் கொண்டாடும் சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவருக்கு திடீர் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து தேசிய இதயநலக் கழத்தில் (ஐஜேஎன்) அவர் ஓய்வெடுக்க சேர்க்கப்பட்டார்.

அவரது உதவியாளரான சுஃபி யூசோஃப், டாக்டர் மகாதீர் இதயநலக் கழகத்தில் காலை 10.00 மணியளவில் சேர்க்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

முன்னாள் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இன்று பின்னேரத்தில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இன்று காலை பிறந்த நாளைக் கொண்டாடும் சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் சற்று சோர்வுடன் இருப்பதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார். மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர்,” என்று சுஃபி யூசோஃப் மேலும் தெரிவித்தார்.

ஜூலை 10ஆம் தேதி டாக்டர் மகாதீரின் 100வது பிறந்த நாளையும் ஜூலை 12ஆம் தேதி அவரது மனைவி சிட்டி ஹஸ்மாவின் 99வது பிறந்த நாளையும் கொண்டாடும் வகையில் இன்று பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷன் அருகே புத்ராஜெயா ஏரியில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

டாக்டர் மகாதீர் தானே காரை ஓட்டிவந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் ஏரியைச் சுற்றி சைக்கிள் பயணத்தில் அவர் பங்கேற்றார். எட்டு, ஒன்பது கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்திற்குப் பிறகு அவர் சோர்வாகக் காணப்பட்டார். ஓய்வு எடுப்பதற்காக அவர் உடனடியாக நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். பத்து மணியளவில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளி யேறினார். அதற்குமுன் அங்கு கூடியிருந்தவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்