செப்பாங்: பயணிகள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய அதிவேக ரயில் மீண்டும் அதன் சேவையை விரைவில் தொடங்க உள்ளது.
ஜூலை 1ஆம் தேதி ரயில் சேவை தொடங்கும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்தார்.
“பல ஆண்டுகளுக்கு முன் அது சேவையை நிறுத்தியது. தற்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு திட்டம் நிறைவடைந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய அதிவேக ரயிலில் அவசரகாலத் தேவை உள்பட இன்னும் பல சோதனைகள் நடத்தப்படும் என்றும் திரு லோக் சொன்னார்.
அனைத்தும் சரிவர நடந்து முடிந்தால் ஜூலை 1ஆம் தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு ரயில் சேவை தொடங்கும் என்றார் அவர்.
அதிவேக ரயில் திட்டம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சேவையையும் மதிப்பையும் மெருகேற்றும் என்று திரு லோக் சுட்டினார்.
பயணிகள் நடமாட்டத்தை மேம்படுத்த தற்போதிருக்கும் பேருந்துச் சேவைகளும் வழக்கம்போல செயல்படும்.
“கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் சுமுகமான முறையில் நடமாடுவதை உறுதிசெய்ய அத்தகைய நடைமுறைகள் தேவை,” என்று திரு லோக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைக்கு மூன்று அதிவேக ரயில் சேவை இருப்பதாகச் சொன்ன திரு லோக், அவற்றுள் இரண்டு ரயில்கள் மாறிமாறி சேவை வழங்கும் என்றார்.
உச்சநேரம் அல்லாத சமயங்களில் ஒரு ரயில் மட்டும் சேவை வழங்கும் என்றும் இதர ரயில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என்றும் திரு லோக் விளக்கம் அளித்தார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், வழக்கமாக நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை பயணிகள் கூட்ட நெரிசல் அல்லாத நேரம்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் செயல்படும் ஒவ்வொரு அதிவேக ரயிலிலும் மூன்று பெட்டிகள் உண்டு.
அந்த ரயில் பெட்டிகள் மூலம் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 270 பயணிகளைக் கொண்டு செல்ல முடியும்.