தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவுடன் நேரடி ராணுவத் தொடர்பு: அமெரிக்கா

1 mins read
2fb4349d-d1fe-4e95-a4b8-e1b7c478d6e5
 இரு நாட்டு தற்காப்பு அமைச்சர்களும் வெள்ளிக்கிழமை (31 அக்டோபர்) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். படத்தில் அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இருநாடுகளுக்கு இடையே பூசலைத் தவிர்க்க நேரடியாக ராணுவத் தொடர்புகளை ஏற்படுத்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம் கண்டுள்ளன. இதனை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் அவரது சமூக ஊடகத்தில் சனிக்கிழமை (நவம்பர் 1) பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் சீ ஜின்பிங் இருவரும் தென்கொரியாவில் வர்த்தக உடன்பாடு குறித்து சந்தித்துக்கொண்ட மறுநாள், இரு நாட்டு தற்காப்பு அமைச்சர்களும் வெள்ளிக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சீனத் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுனுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு திரு ஹெக்செத் தனது கருத்துகளை வெளியிட்டார். நேரடி ராணுவத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இருநாடுகளுக்கும் இடையே நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

“இருநாட்டு நேரடி ராணுவத் தொடர்பு எவ்வித பிரச்சினைகளும் எழாமல் தவிர்த்து அமைதி, நல்லுறவு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இதுவே சிறந்த வழி” என்று திரு ஹெக்செத் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தென்கிழக்காசிய நாடுகள், சீன ஆதிக்கத்தை தவிர்க்க வட்டாரத்தின் கடல் பகுதிகளில் அதிக ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரண்டுநாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு, மலேசியா சென்றிருந்த அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆசிய நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களை அங்கு சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்