தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குவாண்டஸ் விமான நிறுவனத்தில் இணைய ஊடுருவல்

2 mins read
bd6f2093-c7a4-4ed0-ab53-e366dfe5e156
ஆறு மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களைக் கொண்ட குவாண்டஸ் விமான நிறுவனத்தின் தளம் ஊடுருவப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்களைக் கொண்ட குவாண்டஸ் விமான நிறுவனத்தின் தரவுத் தளத்தில் இணைய ஊடுருவல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் அண்மை ஆண்டுகளில் நிகழ்ந்த ஆகப் பெரிய இணைய ஊடுருவல் சம்பவம் அது.

தனிநபர் ஒருவர் அழைப்பு நிலையத்தைக் குறிவைத்து மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவைத் தளத்தை ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.

அதில் ஆறு மில்லியன் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பிறந்தநாள்கள் போன்ற தனிப்பட்ட விவரங்கள் இருந்ததாகக் குவாண்டஸ் (ஜூலை 2) அறிக்கை வெளியிட்டது.

சேவைத் தளத்தில் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கையைக் கண்டறிந்ததை அடுத்து ஊடுருவல் பற்றி அறிந்ததாகச் சொன்ன குவன்டஸ், உடனடியாக அதைக் கட்டுப்படுத்தியதைக் குறிப்பிட்டது.

“எவ்வளவு தரவுகள் களவாடப்பட்டது என்பது விசாரிக்கப்படுகிறது. இருப்பினும் அது பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்ற குவாண்டஸ், செயல்பாடுகளுக்கும் பாதுகாப்புக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றது.

குவாண்டஸ்
குவாண்டஸ் - படம்: ஏஎஃப்பி

தொலைத்தொடர்புக் கட்டமைப்பு நடத்துநர் ஒப்டஸ், சுகாதாரக் காப்புறுதி நிறுவனம் மெடிபேங் ஆகியவை 2022ஆம் ஆண்டு ஊடுருவப்பட்டதை அடுத்து இணையப் பாதுகாப்புச் சட்டங்களை ஆஸ்திரேலியா வலுப்படுத்தியது.

கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முன்னும் பின்னும் மேற்கொண்ட நடவடிக்கையால் மக்களின் நம்பிக்கையை இழந்த குவாண்டஸ் விமான நிறுவனம் மீண்டும் அதை வெல்ல முயல்கிறது.

2020ஆம் ஆண்டில் எல்லைகள் மூடப்பட்டபோது சட்டவிரோதமாக ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த குவாண்டஸ் தொடர்ந்து அரசாங்க உதவித்தொகையைப் பெற்றது.

ஏற்கெனவே ரத்துசெய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டுகளையும் விற்றதை விமான நிறுவனம் ஒப்புக்கொண்டது.

ஆக அண்மைய ஊடுருவல் பற்றி ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்புத் துறைக்குத் தெரிவித்துவிட்டதாகக் குவாண்டஸ் சொன்னது.

2023ஆம் ஆண்டு குவாண்டஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்ற வெனஸா ஹட்சன், “இந்த ஊருருவல் ஏற்படுத்தும் நிச்சயமற்ற நிலையை அறிவோம். வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் நம்பிக்கையுடன் கொடுத்துள்ளனர். அதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம்,” என்றார்.

குவாண்டஸ்
குவாண்டஸ் - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்