ஹவானா: கியூபாவில் நிலவும் கடுமையான பொருளியல் நெருக்கடியால் அங்கு நாளுக்கு நாள் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை உயர்ந்து, பலரும் உணவிற்குக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்கா விதித்துள்ள பொருளியல் தடைகளால் கம்யூனிச நாடான கியூபா கடந்த முப்பது ஆண்டுகளாகவே கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
கியூபாவின் மையப்படுத்தப்பட்ட பொருளியல் கட்டமைப்பு வலுவிழந்து இருப்பதைப் பகுப்பாய்வாளர்கள் சுட்டுகின்றனர். கொவிட்-19 தொற்றுப் பரவலையடுத்து அந்நாட்டின் சுற்றுலாத் துறையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாகவே இலவச சுகாதாரப் பராமரிப்பு, மானியத்துடன் கூடிய உணவு போன்றவற்றுக்குச் செலவிட கியூபா அரசிடம் போதிய பணம் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், உணவுப்பொருள்களின் விலை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்துவிட்டது.
தீவு நாடான கியூபாவில் 9.7 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில், 189,000 குடும்பங்களும் 350,000 தனிமனிதர்களும் சமூக உதவித் திட்டங்கள்மூலம் பயனடைந்து வருவதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கியூபாவில், எத்தனை பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பது குறித்து அதிகாரத்துவத் தரவுகள் இல்லை. ஆயினும், கியூபாவில் கிட்டத்தட்ட 40%-45% மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பதாக சமூகவியலாளர் மேரா எஸ்பினா மதிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாடு உண்மையிலேயே சிக்கலை எதிர்கொண்டு வருவதை கியூபா பிரதமர் மேனுவல் மரேரோ ஒத்துக்கொண்டுள்ளார்.

