தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம்; இஸ்‌ரேலைச் சாடிய வடகொரியா

1 mins read
9f853b72-0ead-4eb9-b16c-b84416a08e6e
இஸ்‌ரேல் பாய்ச்சிய ஏவுகணைகளால் ஈரானில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்

பியோங்யாங்: அண்மையில் (ஜூன் 13) ஈரான் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், போரைத் தொடங்கிய இஸ்‌ரேலுக்கு எதிராக வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்‌ரேலின் செயல்கள் மனிதாபிமானத்துக்கு எதிரானவை என்று அது சாடியது.

இஸ்‌ரேலையும் ஈரானையும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தூண்டிவிட்டு போரை மோசமாக்கக்கூடாது என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய மக்களை இஸ்‌ரேல் கொல்வதாகவும் இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் வடகொரியா அதிருப்தி தெரிவித்தது.

இஸ்‌ரேலின் செயல்கள் பயங்கரவாதத்துக்குச் சமம் என்றும் அவற்றின் விளைவாக மத்திய கிழக்கு முழுவதிலும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அது அறிக்கை வெளியிட்டது.

இஸ்‌ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 224 பேர் மாண்டுவிட்டதாக ஜூன் 15ல் ஈரான் தெரிவித்தது.

மாண்டோரில் ராணுவத் தளபதிகள், அணுவாயுத விஞ்ஞானிகள், பொதுமக்கள் ஆகியோர் அடங்குவர் என்று அது கூறியது.

அதையடுத்து, மாண்டோர் எண்ணிக்கை குறித்த தகவல்களை ஈரான் வெளியிடவில்லை.

ஜூன் 13ஆம் தேதியிலிருந்து குறைந்தது 24 பேர் மாண்டுவிட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் இஸ்‌ரேலிய அரசாங்கம் தெரிவித்தது.

மாண்டோரில் பொதுமக்களும் அடங்குவர் என்று இஸ்‌ரேல் கூறியது.

குறிப்புச் சொற்கள்