ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் பொருளியல் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருவதோடு அன்றாட வாழ்க்கைச் செலவினங்களும் கூடி வருகின்றன.
நாசி லெமாக் முதல் வீடுகள் வரை சிங்கப்பூரின் விலையை அவை நெருங்கி வருகின்றன.
இந்நிலையில் 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலம் வளர்ச்சியடைந்த நிலையை நோக்கிச் செல்லும்போது அதிகரித்து வரும் வாழ்ச்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி உறுதி கூறியுள்ளார்.
மலேசியாவின் சீன வர்த்தக, தொழிற்சபையின் (ஏசிசிசிஐஎம்) 79வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது இந்த உறுதிமொழியை வழங்கினார்.
ஜோகூரின் வளர்ச்சி வேகமும் கடற்பாலத்தையடுத்துள்ள தேவைகளும் ஒரு காரணமாகும் என்று கூறிய முதல்வர், மலேசியாவின் பிற பகுதிகளைவிட உணவு, வாடகை மற்றும் சொத்து விலைகள் ஜோகூரில் அதிகரித்துள்ளதை ஒப்புக்கொண்டார்.
ஜோகூரையும் மலேசியாவையும் மேலும் வளமாக்குவதில் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் வர்த்தக சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.
அனைவரும் வெற்றி பெறுவதற்காக சாத்தியமான பங்காளிகளுடன் அரசாங்கம் இணைந்து பணியாற்றவும் தயாராக இருப்பதாக தனது தொடக்க உரையில் அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர் பாருவின் திசல் ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
இதில் ஜோகூர் மாநில முதலீடு, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம், மனித வளக் குழுவின் தலைவர் லீ டிங் ஹானும் ஏசிசிசிஐஎம்மின் தலைவர் இங் யிஹ பிங்கும் பங்கேற்றனர்.
“அண்மையில் உணவு, வாடகைக் கட்டணங்கள் ஆகியவை, ஜோகூரின் அதிவேக வளர்ச்சி காரணமாக உயர்ந்து வருகின்றன.
“உதாரணமாக, ஒரு தட்டு ‘நாசி லெமாக் ஆயாம் கோரேங்’கின் விலை 9 ரிங்கிட்டாக இருக்கிறது. இதன் விலை கோலாலம்பூரில் 7 ரிங்கிட்டுதான். ஜோகூரில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதை இது தெளிவாகக் காட்டுகிறது” என்றார் அவர்.
“ஒரு சோதனைச் சாவடி தொலைவில் உள்ள சிங்கப்பூரிலிருந்து அதிகமானோர் சொத்துகளை வாங்குவதால் ஜோகூரின் சொத்துச் சந்தை இன்னும் வேகமாக சூடுபிடித்து வருகிறது. அண்மையில் ஒரு வீட்டுத்திட்டத்தின் 300 வீடுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கட்டுமான மேம்பாட்டாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இது, இங்குள்ள சொத்துகள் அமோகமாக விற்பனையாவதைக் காட்டுகிறது.
“இருப்பினும், சிங்கப்பூரில் உள்ளதைவிடவிட இங்கு சொத்து விலைகள் உயர்ந்து கொண்டிருக்கிறது அல்லது ஏற்கெனவே அதிகமாக இருக்கும் அபாயம் உள்ளது,” என்று முதல்வர் ஒன் ஹஃபிஸ் கூறினார்.
“இந்தப் போக்கு மிகவும் மலிவு விலை வீடுகளுக்கான அவசரத் தேவையை சுட்டிக்காட்டுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

