ஜகார்த்தா: இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பண்டுங் நகருக்கு கடந்த 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஊஷ்’ விரைவு ரயில் திட்டம், தற்போது அந்நாட்டு ஊழல் எதிர்ப்பு அமைப்பின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதன் செயல்பாடுகள் தொடங்கும் முன்பாகவே, அளவுக்குமீறிய கட்டுமானக் கடன்கள் பற்றி பலர் குறைகூறினர்.
இந்தோனீசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (KPK) 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விசாரணையைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, “நிலுவையில் உள்ள கடன்களினால் எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அதிபர் பிரபோவோ சுபியாந்தோ பொதுமக்களுக்கு மறுஉறுதியளித்துள்ளதும் கவனத்துக்குரியது.
“முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது, ஆதாரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன” என்று ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் ஜெஹனிஸ் தனக் செய்தியாளர்களிடம் புதன்கிழமை (நவம்பர் 5) கூறினார்.
விசாரணை நடைபெறுவதை அதிபர் எந்த விதத்திலும் தடுக்கவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார். சட்டப்படி நடக்கும் விசாரணையில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் அதிபரிடம் தெரிவிக்கப்படும் என்றும் விசாரணை நடைமுறைகளை அதிபர் மதித்து அதற்கான நடவடிக்கைகளை அவர் எடுப்பார் எனவும் திரு ஜெஹனிஸ் கூறினார்.
ஏனெனில், தேர்தல் பிரசாரத்தில் ஊழலுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை அதிபர் தெளிவாக வலியுறுத்தியதை திரு ஜெஹனிஸ் குறிப்பிட்டார்.
முன்னாள் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தென்கிழக்காசியாவின் முதல் அதிவிரைவு ரயில் என்று பெருமையுடன் முன்மொழிந்த இந்தத் திட்டம் பல பிரச்சினைகளை தொடக்கத்திலிருந்தே எதிர்கொண்டுள்ளது. பல வரைவுத் திட்டங்கள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் மொத்த செலவு கேள்விக்குள்ளாகியது.
சீனா மற்றும் இந்தோனீசியாவின் இரு பெருநிறுவனங்கள் இணைந்து இந்த ‘ஊஷ்’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. அதனை ‘பிடி செப்பாட் இந்தோனீசியா சீனா’ (KCIC) என்ற அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தோனீசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசிய முன்னாள் அரசியல் ஒருங்கிணைப்பு, சட்ட, பாதுகாப்பு அமைச்சர் மஹஃபுட் எம்டி இந்தக் கட்டுமானக் குறைபாடுகளை சமூக ஊடகத்தில் வெளியிட்டபின் இது பூதாகரமானது. ஒரு கிலோ மீட்டருக்கு S$22 மில்லியன் என்று சீனாவில் இதேபோன்ற விரைவு ரயில் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட நிலையில் இந்தோனீசியாவில் அதே தூரத்துக்கு S$69 மில்லியன் என்று அதிகரித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
‘ஊஷ்’ திட்டத்துக்கான மொத்தச் செலவு S$9.39 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

