பெய்ஜிங்: தைவான் குறித்து ஜப்பானியப் பிரதமர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சீனக் கடலோரக் காவல்படையின் கப்பல் குழு, ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள ‘செங்காக்கு’ தீவுப் பகுதியை கடந்து சென்றுள்ளன.
இருநாடுகளுக்கும் அந்தத் தீவின் உரிமைபற்றிய சர்ச்சை தொடர்ந்து இருந்துவருகிறது.
ஜப்பான் செங்காக்கு என்றழைக்கும் தீவை, சீனா ‘டியாவ்யு’ என்று குறிப்பிடுகிறது.
உரிமையை நிலைநாட்டும் நடவடிக்கையாக அந்த கப்பல் குழுவின் பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று சீனக் கடலோரக் காவல்படை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனா, ஜனநாயக நாடான தைவானை தாக்க நேர்ந்தால், ஜப்பானிய ராணுவம் பதிலடி கொடுக்கக்கூடும் என்று பிரதமர் சானே தகாய்ச்சி கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஜப்பானிய நாடாளுமன்றத்தில் கூறியிருத்தார். அதன் பிறகு சீனா, ஜப்பான் இருநாடுகளுக்கும் அரசதந்திர உறவுகளில் பின்னடைவு உண்டானது.
மேலும் ஜப்பானியப் பிரதமர் அவரது கருத்தை மீட்டுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக சீனா கோபத்துடன் கேட்டுக்கொண்டது.
தைவான் தனது பகுதி என்று கூறும் சீனா, என்றாவது ஒருநாள் ராணுவத்தைக் கொண்டு அது மீட்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தைவான் ஜப்பானில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சீனாவின் உரிமைக் கோரிக்கையை தைவான் திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. அதன் எதிர்காலத்தை தைவானிய மக்களே முடிவுசெய்வர் எனவும் தைவான் தெரிவித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பெய்ஜிங்கில் உள்ள ஜப்பானியத் தூதரகம், எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

