பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆசியான் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வது சந்தேகமே என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
உச்சநிலை மாநாட்டில் அவர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு இதற்கு முன்னர் நிலவியது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கோலாலம்பூரில் அக்டோபர் மாதம் 26ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டில் அமெரிக்க, சீன அதிபர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக இம்மாதம் கூறியிருந்தார்.
திரு டிரம்ப் இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்பை ஏற்ற பிறகு அவரும் ஸியும் நேருக்கு நேர் சந்திக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கணித்திருந்தனர்.
சீனப் பிரதமர் லி சியாங், சீனாவின் சார்பில் ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு டிரம்ப் மாநாட்டில் பங்கேற்பதைத் தொலைபேசி உரையாடலின்போது உறுதிப்படுத்தியிருப்பதாக மலேசிய நாடாளுமன்றக் கூட்டத்தில் திரு அன்வார் ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் ஏப்பெக் உச்சநிலை மாநாட்டிலும் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
சீன அதிபர்கள் ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பது அரிது. திரு ஸி இதற்கு முன்னர் ஒரு முறை மட்டுமே ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு அவர் காணொளி வழியாகக் கலந்துகொண்டார்.