உளவு பார்த்ததாக ஜப்பானியருக்குச் சீனாவில் சிறை

1 mins read
f3414f6d-e626-49c1-bc94-97e341baa16a
சீனாவில் ஜப்பானியக் குடிமகன் ஒருவர் உளவு பார்த்ததாக மூன்றறை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே

பெய்ஜிங்: சீனாவில் ஜப்பானியக் குடிமகன் ஒருவர் உளவு பார்த்ததாக மூன்றறை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டதாக நிப்பான் தொலைக்காட்சி தெரிவித்தது.

தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர் சீனாவில் உள்ள ஜப்பானிய மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

அவர் ஓர் உளவாளியெனச் சீன அதிகாரிகள் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர். பின்னர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் அந்த ஆடவர்மீது குற்றஞ்‌‌சாட்டப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட ஆடவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதைச் சீனா மறுத்துள்ளது.

ஆடவரை விடுதலை செய்வது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று சீனா கூறுகிறது.

“இது கவலைக்குரிய நடவடிக்கை. எங்களது குடிமகனை விரைவாக விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்,” என்று சீனாவுக்கான ஜப்பானியத் தூதர் கெஞ்சி கனாசுகி தெரிவித்தார்.

இந்தத் தண்டனை காரணமாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே அந்த இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு பூசல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்