தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தானியக்க இயந்திரங்களை சீனா, தற்போது கூடுதலாக ஏற்றுமதி செய்து வருகிறது.
கொவிட் 19 கிருமித்தொற்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டுமே இத்தகைய இயந்திரங்களின் சீன ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
2024ல் ஏற்றுமதிகளின் மதிப்பு, 1.13 பில்லியன் டாலர்( 1.45 பில்லியன் வெள்ளி). 2025ல் ஏற்றுமதிகளின் முதற்பாதியின் மதிப்பு, 746 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
ஆண்டு அடிப்படையில் இத்தகைய இயந்திரங்களின் ஏற்றுமதிகள் 60 விழுக்காடு அதிகரித்து வருவதாக சீனாவின் பொதுச் சுங்கத்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
வியட்நாம், மெக்சிகோ, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இத்தகைய இயந்திரங்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழின் கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன.
இத்தகைய நாடுகளுக்கு அனுப்பப்படும் இந்த ஏற்றுமதிகளின் ஏற்றம், சீனாவின் உற்பத்தித் துறையில் ஏற்படும் மாற்றத்தை எடுத்துரைப்பதாக இயூரேஷியா ஆலோசக குழுமத்தின் சீனா பிரிவின் இயக்குநர் டேன் வாங் தெரிவித்தார்.
மலிவுச்சந்தைகளுக்கான வாகன, மின்னணுவியல் துறைகளுக்கு இந்த இயந்திரங்கள் பெரும்பாலும் பயன்படுவதாக அவர் கூறினார்.
வர்த்தகப் பதற்றநிலை, அதிகரித்துவரும் செலவுகள், தளவாடத் தொடர்களுக்கான மீள்திறன் ஆகியவற்றால் உலக நாடுகள், தங்களது உற்பத்தித் துறையில் பன்முகத்தன்மையை அதிகரிக்க முற்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானியர்களும் ஐரோப்பியர்களும் ஆதிக்கம் செலுத்தும் தானியக்க இயந்திரச் சந்தையில், தளவாடத் தொடர்களின் மாற்றம், நல்ல வர்த்தக வாய்ப்பை வழங்குவதாக, சிங்கப்பூரைத் தளமாக்கொண்டுள்ள ஒம்டியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சூ லியென் ஜாய் கூறினார்.
சீனாவில் தயாரிக்கப்படும் தானியக்க இயந்திரங்களின் விலை, மற்ற நாடுகளின் அதே பொருள்களுக்கான விலையைக் காட்டிலும் 30, 35 விழுக்காடு குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

