தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறை உச்சத்தை எட்டியது: ஐ.நா. அறிக்கை

2 mins read
27bd4b35-7a9f-48ca-bed8-ec25c746c908
4,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 7,000 பேர் காயமடைந்த நிலையில், குழந்தைகள் தொடர்ந்து இடைவிடாத விரோதப் போக்கு மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்களின் சுமைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறியது. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: காஸா தொடங்கி கோங்கோ வரை போர்க் களங்களில் இடம்பெறும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவை எட்டியிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கை கூறுகிறது.

2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான கடுமையான வன்முறைச் சம்பவங்கள் 25 விழுக்காடு கூடியதாக ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் சுட்டினார்.

2024ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிராக 41,370 வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. சிறுவர்களுக்கு எதிரான வன்முறையைக் கணக்கில்கொள்வது தொடங்கிய 30 ஆண்டுகளில் இதுவே ஆக அதிக எண்ணிக்கை.

ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் புதிய உச்சத்தைத் தொட்டன. 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 2023இல் பதிவான அத்தகைய சம்பவங்கள் 21 விழுக்காடு அதிகம்.

4,500க்கும் அதிகமான சிறுவர்கள் மரணமடைந்ததுடன் 7,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். போர் வன்முறையும் தாக்குதல்களும் சிறுவர்களைத் தொடர்ந்து கடுமையாகப் பாதிப்பதாக அறிக்கை குறிப்பிட்டது.

பலமுறை வன்முறைக்கு ஆளாகும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் 22,495க்கு அதிகரித்தது.

“22,496 அப்பாவி சிறுவர்களும் எப்படி வாசிப்பது அல்லது விளையாடுவது என்பதைக் கற்க வேண்டும். மாறாக துப்பாக்கிச்சூட்டிலிருந்தும் வெடிகுண்டுத் தாக்குதல்களில் இருந்தும் எப்படி தப்பிப்பது என்பதை அறிந்துகொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்,” என்று ஐக்கிய நாட்டு நிறுவனப் பிரதிநிதி வர்ஜினியா காம்பா கூறினார்.

ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், 18 வயதுக்குக்கீழ் உள்ள சிறுவர்களின் உரிமைகள் உலக நாடுகளில் உள்ள சுமார் 20 போர்க் களங்களில் எவ்வாறு அத்துமீறப்பட்டன என்பதை தொகுத்துள்ளது.

அறிக்கையில் வன்முறைக்குப் பொறுப்பான அமைப்புகளும் பட்டியலிடப்பட்டன. இந்த ஆண்டு ஹயாடி கும்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அந்தக் குழுவால் சிறுவர்களை ஆள்சேர்ப்பது, கொலை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகியவை 490 விழுக்காடு அதிகரித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு இஸ்ரேலிய ராணுவப் படைகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கிளர்ச்சிக் குழு ஆகியவையும் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

காஸாவில் தொடரும் போரால் பல பிள்ளைகள் பாதிக்கப்பட்டனர்.
காஸாவில் தொடரும் போரால் பல பிள்ளைகள் பாதிக்கப்பட்டனர். - படம்: ஏஃப்பி
குறிப்புச் சொற்கள்