பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது அமைச்சரவையில் விரைவில் நான்கு காலியிடங்கள் ஏற்படும் நிலையில், தமது ஒற்றுமை அரசாங்கக் கட்சிகள் எதற்கும் இடையூறு விளைவிக்காமல் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நுட்பமான சமநிலைப்படுத்தும் செயலை இப்போது எதிர்கொள்கிறார்.
பிரதமரின் பதவியைத் தவிர அமைச்சரவையில் காலியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியத்தை மத்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், காலியிடங்களை நிரப்ப அவசரம் இல்லை என்றாலும், நீடித்த காலியிடம் பொதுமக்களின் அவநம்பிக்கையை உருவாக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் சாபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகுதான் எந்தவொரு மறுசீரமைப்பும் நிகழ வாய்ப்புள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.
கடந்த மே மாதம் பிகேஆர் கட்சித் தேர்தலுக்குப் பிறகு பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ராம்லி மற்றும் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் பதவியை விட்டு விலகியதால் இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாகின.
சாபாவின் உப்கோ கட்சியைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் எவோன் பெனடிக், கடந்த வார இறுதியில் பதவி விலகினார். அதே நேரத்தில் அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸீசின் செனட்டர் பதவி டிசம்பரில் முடிவடைகிறது. அதை மேலும் நீட்டிக்க முடியாத நிலை உள்ளது.
சாபாவின் அரசியலமைப்பு உரிமையான மத்திய அரசு வருவாயில் 40 விழுக்காட்டை மாநிலத்திலிருந்து பெறுவதற்கான உரிமையைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் புறக்கணித்ததாகக் காரணம் கூறி திரு எவோன் பதவி விலகினார்.
இப்போதைக்கு, இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான், திரு ரஃபிசி வகித்த பதவியையும் தோட்ட மற்றும் பண்டகங்கள் அமைச்சர் ஜோஹாரி கனி, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியையும் கவனித்து வருகின்றனர்.
சாபாவில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் அன்வார் கவனிக்க வேண்டியிருப்பதால், டிசம்பரில் மட்டுமே அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்று சன்வே பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“சாபா தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கிய போட்டியாளர்களும் மடானி அரசாங்கத்தின் உறுப்பினர்கள்,” என்று அவர் கூறினார்.
அரபு மொழியில் ‘மடானி’என்ற சொல்லுக்கு நாகரிகம் அல்லது நவீனம் என்ற பொதுவான பொருள் உண்டு.
“மற்ற கட்சிகளுடன் பதவிகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், பொருளியல் மற்றும் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறைகளை பிகேஆர் எம்.பி.க்களால் நிரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு,” என்று பேராசிரியர் வோங் மேலும் கூறினார்.
பிகேஆரில் திரு ரஃபிசியை வீழ்த்தி 2வது இடத்தைப் பிடித்த பிரதமரின் மகள் நூருல் இஸ்ஸா, பொருளியல் அமைச்சுக்குப் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பேராசிரியர் வோங் நம்புகிறார்.
முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் மீண்டும் அம்னோவில் இணைந்து அமைச்சரவையில் சேர்க்கப்படுவது குறித்த பேச்சுகளையும் பேராசிரியர் வோங் சுட்டிக்காட்டினார்.

