பிணையாளிகளை விடுவிப்பதிலும் இணக்கம்

ஹமாசுடன் சண்டைநிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல்

2 mins read
08fdf55b-435c-4fe2-b926-d68f68eb55b7
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் குழுவும் இணங்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து மத்திய காஸாவில் பாலஸ்தீனக் கொடியைச் சிலர் ஏந்தியிருக்கும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: இஸ்ரேலிய அமைச்சரவை, ஹமாஸ் குழுவுடனான சண்டை நிறுத்த உடன்பாட்டை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) ஏற்றுக்கொண்டுள்ளது.

காஸாவில் 24 மணிநேரத்திற்குள் சண்டையைத் தற்காலிகமாக நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. அதே வேளையில், காஸாவில் ஹமாஸ் வசமுள்ள இஸ்ரேலியப் பிணையாளிகளை 72 மணிநேரத்திற்குள் விடுவிக்கவும் அது வழிவிட்டுள்ளது.

உடன்பாட்டின்படி, காஸாவின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை மீட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. காஸா நகருக்குள் இதற்கு முன்னர் அடையமுடியாத இடங்களுக்கு மீட்புப் பணியாளர்கள் போக ஆரம்பித்திருக்கின்றனர். அண்மைக் காலத்தில் ஆகப் பெரிய மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகின் உதவி அமைப்புகள் பல தயாராகி வருகின்றன. ஐக்கிய நாட்டு நிறுவனம் ஏராளமான உதவிப்பொருள்களைப் பெரிய வாகனங்களில் அனுப்பவிருக்கிறது.

காஸாவில் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏறக்குறைய ஈராண்டாகப் போர் நடைபெறுகிறது. அதனை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்தார். திட்டத்தின் முதற்கட்டத்திற்கு இணங்குவதாக இஸ்ரேலிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலையில் தெரிவித்தது.

“உயிருடன் இருப்போர், மாண்டோர் என அனைத்துப் பிணையாளிகளையும் விடுவிப்பதற்கான அமைதித் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது,” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தமது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.

காஸா போர் அனைத்துலக அளவில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கியது. மத்திய கிழக்கில் கொந்தளிப்பு கூடியது. போர், வட்டாரப் பூசலாக உருவெடுத்தது. அதற்குள் ஈரான், ஏமன், லெபனான் ஆகிய நாடுகளும் இழுக்கப்பட்டன. அமெரிக்க-இஸ்ரேலிய உறவையும் அது சோதித்துப் பார்த்தது. ஒரு கட்டத்தில் திரு நெட்டன்யாகுவிடம் பொறுமை இழந்தார் திரு டிரம்ப். அமைதி உடன்பாட்டை எட்ட ஒப்புக்கொள்ளும்படி அவரை நெருக்கினார் அமெரிக்க அதிபர்.

உடன்பாடு பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். காஸா வட்டாரத்தின் ஹமாஸ் குழுத் தலைவர் கலீல் அல்-ஹய்யா அமெரிக்காவும் சமரசப் பேச்சுகளில் ஈடுபட்ட மற்ற நாடுகளும் போர் முடிந்துவிட்டதாய் உத்தரவாதம் தந்திருப்பதாகக் கூறினார். அவர் அந்த வட்டாரத்தில் வசிக்கவில்லை.

ஹமாஸ் எஞ்சிய பிணையாளிகளை விடுவிக்கும் வேளையில் இஸ்ரேலின் வசமுள்ள நூற்றுக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்படுவர். காஸாவில் இஸ்ரேலியப் பிணையாளிகள் இன்னும் 20 பேர் உயிரோடு இருப்பதாகவும் 26 பேர் மாண்டுவிட்டதாகவும் நம்பப்படுகிறது. இன்னும் இருவரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இஸ்ரேலியப் படைகளின் நடவடிக்கைகளால் காஸாவில் வீடுகளை இழந்த மக்கள் திறந்தவெளியில் கூடாரங்களில் வசிக்கின்றனர். உடன்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அங்கு அவதியுறும் மக்களுக்காக உணவு, மருந்துப்பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படும்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப், மத்திய கிழக்கு வட்டாரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) செல்லப்போவதாகக் கூறியுள்ளார். எகிப்தில் கையெழுத்துச் சடங்கு நடைபெறும் நிகழ்வில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன்பாடு அந்த வட்டாரத்தில் நீடித்த அமைதிக்கு வழிவிடும் என்று திரு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்