ஹாங்காங்கில் சரக்கு விமானம் ஓடுபாதையிலிருந்து விலகியது; விமான நிலைய ஊழியர்கள் இருவர் மரணம்

1 mins read
8361604d-23fa-4d11-9a5b-ccdac2d063e0
விபத்தில் சிக்கிய சரக்கு விமானம் கடலில் விழுந்து பகுதியளவில் நீரில் மூழ்கியது. - படம்: இபிஏ
multi-img1 of 2

ஹாங்காங்: துபாயிலிருந்து ஹாங்காங் சென்ற சரக்கு விமானம் ஒன்று திங்கட்கிழமை (அக்டோபர் 20) அதிகாலை ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த இரு ஹாங்காங் விமான நிலைய ஊழியர்களின் சுற்றுக்காவல் வாகனத்தின்மீது மோதி அதை கடலுக்குள் தள்ளியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய அந்த போயிங் 747 வகை விமானமும் கடலுக்குள் விழுந்து பகுதியளவில் நீரில் மூழ்கியது. இருப்பினும், விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்களும் உயிர்தப்பினர்.

நீரிலிருந்து மீட்கப்பட்டபோது விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் இருவரும் மூச்சுவிடவில்லை என்றும் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக உறுதிசெய்யப்பட்டதாகவும் மற்றொருவர் பின்னர் மருத்துவமனையில் இறந்ததாகவும் ஹாங்காங் விமான நிலைய ஆணையத்தின் விமான நிலைய செயல்பாட்டு செயல் இயக்குநர் ஸ்டீவன் யியு தெரிவித்தார்.

உலகின் மிகவும் பரபரப்பான சரக்கு விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், துபாயைத் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனத்தின் சார்பாக துருக்கி சரக்குப் போக்குவரத்து நிறுவனமான ஏசிடி ஏர்லைன்ஸ் இயக்கிய விமானம் சிக்கியது என்று எமிரேட்ஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரணை செய்து வருவதாகவும் வானிலை, ஓடுபாதை நிலவரம், விமானம், விமானப் பணியாளர்கள் விசாரணையில் இடம்பெறுவதாக திரு யியு கூறினார்.

இந்த விபத்து ஹாங்காங் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் நடந்தது.

ஹாங்காங் விமான நிலையத்தின் விமானச் சேவைகள் இதனால் பாதிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்