ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பங்ளாதேஷில் 2024ஆம் ஆண்டில் மாணவர்கள் தலைமையில் நடந்த புரட்சிப் போராட்டத்தை ஒடுக்க ஹசினா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் பலர் மாண்டனர்.
மாணவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் 2024 ஆகஸ்ட் மாதம் ஹசினா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அவரது ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.
இந்நிலையில், ஹசினாவுக்கு எதிராகப் பல மாதங்களாக பங்ளாதேஷ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. திங்கட்கிழமை (நவம்பர் 17) அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
போராட்டம் நடக்கும் நேரத்தில் மனித நேயத்திற்கு எதிராகச் செயல்பட்ட காரணத்திற்காக ஆயுள் தண்டனையும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் உயிரைப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக மரண தண்டனையும் ஹசினாவுக்கு விதிக்கப்பட்டது.
ஹசினாவுக்கு எதிரான வழக்கில் பல சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, மாணவர்கள்மீது கடுமையாக நடந்துகொள்ள அதிகாரிகளுக்கு அவர் நேரடி உத்தரவு பிறப்பித்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கையின்படி, பங்ளாதேஷில் 2024ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த போராட்டங்களில் 1,400க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
தீர்ப்பு வெளியானபோது டாக்கா நீதிமன்றத்தில் இருந்த மக்கள் அதை ஆரவாரமாகக் கொண்டாடினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹசினா அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
பங்ளாதேஷை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த ஹசினாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஹசினாவின் அவாமி லீக் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான தீர்ப்பால் பங்ளாதேஷில் கலவரம் வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது.

