தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்துப் பிரதமர் பதவி விலகக் குரல்

2 mins read
10a5387c-152f-4cca-b050-ba48b0d195ec
ராணுவ தளபதியைச் சந்திக்க பேங்காக்கிலிருந்து புறப்படும் தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் பதவி விலக வேண்டும் என்று அவரின் ஆளும் கூட்டணியில் இடம்பெறும் ஒன்றுபட்ட தாய்லாந்து தேசக் (யுடிஎன்) கட்சி குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

தாங்கள் கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற வேண்டுமானால் திருவாட்டி ‌ஷினவாத் பதவி விலக வேண்டும் என்று யுடிஎன் நிபந்தனை விடுத்திருப்பதாக அக்கட்சியில் தகவல் தெரிந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

திருவாட்டி ‌ஷினவாத் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அந்நாட்டு ராணுவத் தளபதியைச் சந்திக்கவுள்ளார் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ‌ஷினவாத்தின் மகளான திருவாட்டி ‌ஷினவாத்துக்கும் முன்னாள் கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் கசிந்ததாக செய்தி வெளியானது. அந்த உரையாடலில் திருவாட்டி ‌ஷினவாத், தாய்லாந்து ராணுவத் தளபதியை ஓர் எதிரி என வகைப்படுத்திப் பேசினார்.

உரையாடல் கசிந்த பிறகு 38 வயது ‌ஷினவாத், வியாழக்கிழமை (ஜூன் 19) பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தால் அவரின் அரசாங்கம் கவிழும் நிலையில் உள்ளது. உரையாடல் கசிந்ததையொட்டி ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குத் தாய்லாந்துப் பிரதமராகப் பதவி வகித்து வரும் திருவாட்டி ‌ஷினவாத் மீது கோபம் அதிகரித்துள்ளது.

அவரின் ஆளும் கூட்டணியில் முக்கியக் கட்சியாக விளங்கிய பும்ஜய்தாய் (Bhumjaithai) கடந்த புதன்கிழமை (ஜூன் 18) அக்கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டது. திருவாட்டி ‌ஷினவாத் தாய்லாந்து நாட்டையும் ராணுவத்தையும் இழிவுபடுத்திவிட்டார் என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியது.

எனினும், பழைமைவாத ஜனநாயகக் கட்சி தொடர்ந்து ஆளும் கூட்டணியில் இருக்கப்போவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அது, திருவாட்டி ‌ஷினவாத்துக்கு நற்செய்தியாகப் பார்க்கப்பட்டது.

அக்கட்சியுடனும் யுடிஎன் கட்சியுடனும் இந்த நெருக்கடி குறித்து உடனடிப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சர்த்தய்ப்பட்டானா (Chartthaipattana) கட்சியும் கூட்டணியிலிருந்து விலகப்போவதில்லை என்று வியாழக்கிழமை தெரிவித்தது. அதவேளை, பும்ஜய்தாய் கட்சி விலகிக்கொண்டதைத் தொடர்ந்து திருவாட்டி ‌ஷினவாத்தின் ஃபியூ தாய் கட்சியின் தலைமையிலான ஆளும் கூட்டணி, நாடாளுமன்றத்தில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் பெரும்பான்மை வகிக்கிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று வடகிழக்குத் தாய்லாந்தில் அந்நாட்டு ராணுவப் படைகளின் தளபதியான லெஃப்டினன்ட்-ஜெனரல் பூன்சின் பட்கிலாங்கைச் சந்தித்து தங்களுக்கிடையிலான உறவில் ஏற்பட்டிருக்கக்கூடிய விரிசலை சரிசெய்யும் முயற்சியை திருவாட்டி ‌ஷினவாத் எடுக்கவுள்ளார். லெஃப்டினன்ட்-ஜெனரல் பூன்சினைத்தான் திருவாட்டி ‌ஷினவாத் கசிந்த தொலைபேசி உரையாடலில் எதிரி என்று வகைப்படுத்திப் பேசியிருந்தார்.

அந்தத் தொலைபேசி உரையாடல் கசிந்தது குறித்து தாய்லாந்து, கம்போடியாவிடம் அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அச்செயல், அரசதந்திர வழிமுறைகளை மீறுவதாகும் என்று தாய்லாந்து எடுத்துரைத்தது.

குறிப்புச் சொற்கள்