280 சட்டவிரோத விநியோக ஓட்டுநர்களைப் பிடித்த பிரிட்டன்

2 mins read
b349cde5-19e6-4c59-94a3-7f4bcd45012d
கள்ளக் குடியேற்றத்தை முறியடிக்க பிரிட்டி‌ஷ் அதிகாரிகள் 1,700க்கும் அதிகமான விநியோக ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டனில் விநியோக ஓட்டுநர்களாகச் சட்டவிரோதமாய் வேலை செய்த கிட்டத்தட்ட 280 குடியேறிகளைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கடந்த மாதம் 20ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை நீடித்த ஒருவார சோதனை நடவடிக்கைகளில் குடிநுழைவு அமலாக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 1,780 பேரை தடுத்துநிறுத்தி விசாரணை நடத்தினர்.

அவர்களில் விநியோக ஓட்டுநர் பணியில் சட்டவிரோதமாக ஈடுபட்ட 280 பேர் கைதுசெய்யப்பட்டதாகப் பிரிட்டி‌ஷ் உள்துறை அமைச்சு தெரிவித்தது. அவர்களுள் பிரிட்டனில் தஞ்சம் புகுந்த 53 பேருக்கான ஆதரவு மறுஆய்வு செய்யப்படுகிறது.

கள்ளக் குடியேற்றத்தை முறியடிக்க அரசாங்கம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று. வேலைக்கு ஆள்சேர்க்கும் நபர்களின் குடியுரிமை நிலையைச் சரிபார்க்கும்படி நிறுவனங்களுக்கான புதிய சட்டபூர்வ விதிமுறை அமல்படுத்தப்பட்டது.

கள்ளக் குடியேற்றத்தைக் கையாள முடியும் என்று வாக்காளர்களுக்கு நிரூபிக்க பிரிட்டி‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் அதிக நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளார.

“நாட்டின் விதிமுறைகள் மதிக்கப்படுவதை, கடைப்பிடிக்கப்படுவதை இந்த அரசாங்கம் உறுதிசெய்கிறது,” என்றார் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் எஞ்சலா ஈகல்.

சட்டவிரோத விநியோக ஓட்டுநர்கள் கைதானதைத் தவிர 51 வர்த்தகங்களுக்கு அபராதம் விதிக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. கார் கழுவும் நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவைமீது சட்டவிரோதமாக ஊழியர்களைப் பணியமர்த்தியதற்காக அபராதம் விதிக்கப்படலாம்.

காவல்துறை அதிகாரிகள் 58 மின் சைக்கிள்கள் உட்பட 71 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் 8,000 பவுண்ட் ரொக்கத்தையும் 460,000 பவுண்ட் மதிப்புடைய கள்ள சிகரெட்டுகளையும் கைப்பற்றினர்.

சட்டவிரோதமாக வேலை செய்வோரைக் கையாளா குடிநுழைவு அமலாக்கப் பிரிவுக்குக் கூடுதலாக 5 மில்லியன் பவுண்ட் நிதி வழங்கப்படும் என்று பிரிட்டி‌ஷ் உள்துறை அமைச்சு சொன்னது.

கடந்த 12 மாதங்களில் பிரிட்டன் 35,052 கள்ளக் குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பியது. அதற்கு முந்திய மாதங்களுடன் ஒப்பிடுகையில் அது 13 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்