ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் ஒன்றான மஹாகாம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் எட்டுப் பேர் மாண்டுபோயினர்.
இவ்விபத்து நவம்பர் 10ஆம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் நேர்ந்தது.
படகின் கொள்ளளவைவிட அதிகமான சிமென்ட் மூட்டைகளும் பயணிகளும் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவையே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று மேற்கு கூட்டாய் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.
செம்பனைத் தோட்டம் ஒன்றில் உள்ள படகுத்துறையை நோக்கி அப்படகு சென்றுகொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
படகில் இருந்த 28 பயணிகளில் 20 பயணிகளை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றினர்.
நீரில் மூழ்கி மாண்டோரில் முதலாமவரின் சடலம் புதன்கிழமை காலை 6 மணியளவில் மீட்கப்பட்டது. விபத்து நேர்ந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 3.69 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் கிடைத்ததாகக் கூறப்பட்டது.
மேலும் அறுவரின் சடலங்கள் விபத்து நேர்ந்த இடத்திலிரிந்து 100 மீட்டர் முதல் 13 கிலோமீட்டர் தொலைவிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. எட்டாமவரின் சடலம் நவம்பர் 12ஆம் தேதி மாலை மீட்கப்பட்டது. அவரது உடல் விபத்து நேர்ந்த இடத்திலிருந்து 10.7 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆற்றின் நீரோட்டம் வேகமாக இருந்ததால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது மிகுந்த சிரமமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
விபத்து தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

