பெர்லின்: பெர்லின் பிரேண்டன்பர்க் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) இரவு விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
ஆளில்லா வானூர்திகள் காணப்பட்டதே அதற்குக் காரணம் என்று விமான நிலையப் பேச்சாளர் கூறினார். அண்மையில் ஐரோப்பாவில் அத்தகைய சில மிரட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
வெள்ளிக்கிழமை இரவு 8:08க்கும் 9:58க்கும் இடையில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டன. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்கச் சென்ற விமானங்கள் ஜெர்மனியின் மற்ற நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாகப் பேச்சாளர் சொன்னார்.
இரவு நேரத்தில் சில விமானச்சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் பின்னர் அகற்றப்பட்டது. தற்போதைக்கு ஆபத்துத் தவிர்க்கப்பட்டதாகப் பேச்சாளர் கூறினார்.
பிரேண்டன்பர்க் மாநிலக் காவல்துறை, ஆளில்லா வானூர்தி காணப்பட்டது குறித்த புகார் கிடைக்கப்பெற்றதை உறுதிசெய்தது. சுற்றுக்காவல் வாகனமும் ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டதாக அது சொன்னது.
சுற்றுக்காவல் வாகனம், ஆளில்லா வானூர்தியைக் கண்டுபிடித்தது. ஆனால் அதனை இயக்கியவர் யார் என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
விமான நிலையங்களிலும் முக்கியமான ராணுவத் தளங்களிலும் காணப்படும் ஆளில்லா வானூர்திகள் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக ஜெர்மானியத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
டென்மார்க், நார்வே, போலந்து முதலிய நாடுகளில் உள்ள விமான நிலையங்களும் அண்மைக் காலத்தில் அடையாளம் தெரியாத ஆளில்லா வானூர்திகள் காணப்பட்டதால் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தன.
தொடர்புடைய செய்திகள்
இதற்குக் காரணம் ரஷ்யாவே என்று ருமேனியாவும் எஸ்டோனியாவும் குற்றஞ்சாட்டின. ஆனால் மாஸ்கோ அதனைப் புறக்கணித்தது. ஜெர்மனியும் மாஸ்கோவையே குற்றஞ்சாட்டியது. ரஷ்ய-உக்ரேனியப் போரில் அது கீவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கிறது.

