டா நாங்: வியட்னாமின் ஹங் சன் கிராமப் பகுதியில் விவசாயி ஒருவரைக் கரடி கடுமையாகத் தாக்கியுள்ளது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (அக்டோ பர் 21) மாலை நடந்ததாக டா நாங் நகரக் காவல்துறை தெரிவித்தது.
48 வயது பூலோங் யோங் தமது வேளாண் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது கரடியால் தாக்கப்பட்டார்.
கரடி தாக்கியதில் சுயநினைவு இழந்த யோங் சாலை ஓரத்தில் பல காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். மாலை 6.30 மணிவாக்கில் அவரை அடையாளம் கண்ட கிராமத்து வாசிகள் உடனடியாக மருத்துவ உதவி வழங்கினர்.
யோங்கின் உடலில் கரடியின் நகங்களால் தாக்கப்பட்ட காயங்களும் கரடி கடித்த காயங்களும் இருந்தன.
அதன்பின்னர் 7 மணிவாக்கில் யோங்கின் நிலைமை குறித்து கிராமவாசிகள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து யோங்கிற்கு அவசர உதவி மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
“யோங்கின் முகத்தில் கடுமையான காயங்கள் உள்ளன, குறிப்பாகக் கீழ்த் தாடையில் பலமாக அடி விழுந்துள்ளது. வயிறு, கை, கால் பகுதிகளிலும் காயங்கள் உள்ளன. அதிகமாக ரத்தம் வெளியேறியுள்ளது,” என்று அதிகாரிகள் கூறினர்.
தற்போது யோங்கிற்குச் சுயநினைவு திரும்பியுள்ளது. அவரது உடல்நிலை அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது. காட்டுப் பகுதிகளில் வேலை செய்யும் கிராமத்து வாசிகள் கவனமாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

