தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

18 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலைக் கக்கிய பாலி எரிமலை

2 mins read
a10b4e12-5887-4d67-ad28-6f9d0f444f7f
ஈஸ்ட் ஃப்லோர்ஸ் பகுதியில் உள்ள லெவோடொபி லாக்கி லாக்கி எரிமலை வெடித்ததில் 18,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் எழுந்தது. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து 18 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலைக் கக்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன் அந்த எரிமலை வெடித்ததில் பிரபல பாலித் தீவில் உள்ள விமானச் சேவைகள் ரத்தாகின.

1,584 மீட்டர் உயரத்தில் இரட்டை சிகரங்கள் கொண்ட லெவோடொபி லாக்கி லாக்கி எரிமலை காலை 11.05 மணியளவில் வெடித்ததாக அதிகாரிகள் கூறினர்.

“லெவோடொபி லாக்கி லாக்கி எரிமலை வெடித்ததில் எரிமலை உச்சியிலிருந்து ஏறக்குறைய 18,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் எழும்பியது,” என்று எரிமலை தொடர்பான அமைப்பு சொன்னது.

கடுமையான மழை பெய்தால் எரிமலைச் சாம்பல் கலந்த நச்சு நீர் ஆற்றில் பெருக்கெடுக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். அது ஆற்றுப் பகுதிக்கு அருகில் உள்ளோரைப் பாதிக்கும்.

எரிமலை வெடித்ததில் உயிருடற்சேதம் பற்றி உடனடியாக எந்தத் தகவலும் இல்லை.

எரிமலை சீற்றம் அதிகமாக இருக்கிறது என்று எரிமலை ஆய்வகத் தலைவர் முகமது வாஃபிட் கூறினார்.

குடியிருப்பாளர்கள் அனைவரும் எரிமலையிலிருந்து குறைந்தது 6 கிலோமீட்டார் தூரத்தில் தள்ளியிருக்கும்படி திரு வாஃபிட் அறிவுறுத்தினார். எரிமலை சாம்பலிலிருந்து பாதுகாக்க முகக்கவசங்களையும் அணியும்படி அவர் கூறினார்.

ஜூன் மாதம் எரிமலை வெடித்ததில் பாலித் தீவுக்கான பல விமானச் சேவைகள் ரத்தாகின.

2024 நவம்பரில் லெவோடொபி லாக்கி லாக்கி பலமுறை வெடித்ததில் ஒன்பது பேர் மாண்டதோடு ஆயிரக்கணக்கானோர் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பல அனைத்துலக விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

தற்போது ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் விமானச் சேவைகள் ரத்தானது குறித்து தகவல் இல்லை.

பாலியின் குரா ராய் அனைத்துலக விமான நிலையம் வழக்கம் போல செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

லெவோடொபி லாக்கி லாக்கி வெடிப்பை அடுத்து சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை ஜப்பானிய வானிலை ஆய்வகம் கண்காணிப்பதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்