தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்‌ரேல், ஈரானிலிருந்து நாட்டு மக்கள், தூதர்களை வெளியேற்றிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

1 mins read
220e8120-b25e-4335-868c-0e164d3449dd
வான்வெளி மூடப்பட்டுள்ளதால் போர் மூண்டுள்ள இஸ்‌ரேல், ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றுவது சிரமமாக உள்ளது என்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இஸ்‌ரேலிலிருந்து தனது நாட்டு மக்கள் சிலரை ஆஸ்திரேலியா வெளியேற்றியுள்ளது.

ஈரானிலிருந்து தனது தூதரக ஊழியர்கள் வெளியேறிவிட்டதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

வான்வெளி மூடப்பட்டுள்ளதால் போர் மூண்டுள்ள இவ்விரு நாடுகளிலிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றுவது சிரமமாக உள்ளது என்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 1,500 ஆஸ்திரேலியர்கள் ஈரானிலிருந்து வெளியேற உதவி கோரி பதிவு செய்துள்ளனர்.

இஸ்‌ரேலிலிருந்து வெளியேற ஏறத்தாழ 1,200 ஆஸ்திரேலியர்கள் உதவி கோரியுள்ளனர்.

இத்தகவலை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிட்டார்.

புதன்கிழமையன்று (ஜூன் 18) ஆஸ்திரேலியர்கள் சிலரை ஆஸ்திரேலிய அரசாங்கம் நிலம் வழியாக இஸ்ரேலிலிருந்து வெளியேற்றியதாக திருவாட்டி வோங் செய்தியாளர்களிடம் கூறினார்.

வெளியேற பாதுகாப்பான சூழல் ஏற்பட்டால் ஈரானிலிருந்து உடனடியாக வெளியேறிவிடும்படி ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்‌ரேல் மற்றும் ஈரானிலிருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்றுவது சவால்மிக்கதாக இருப்பதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தை அது தற்காலிகமாக மூடியது.

இரண்டு தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலம் வழியாக அசர்பைஜானுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நியூசிலாந்து கூறியது.

குறிப்புச் சொற்கள்