கோலாலம்பூர்: போலி 100 ரிங்கிட் பணத்தாள்களுடன் ஹோட்டல் அறைகளுக்குக் கட்டணம் செலுத்த முயன்ற சீனாவைச் சேர்ந்த பெண்கள் மூவரை மலேசியக் காவல்துறை வியாழக்கிழமை (ஜூலை 3) கைது செய்தனர்.
கைதான பெண்கள் 18லிருந்து 47 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார். அப்பெண்கள் 100 ரிங்கிட் தாள்களைக் கொண்டு 8,700 ரிங்கிட் (2,620 வெள்ளி) கட்டணம் செலுத்த முயற்சி செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
“கைது நடவடிக்கையின்போது காவல்துறையினர் எண்பத்தேழு 100 ரிங்கிட் தாள்கள், இரண்டு லூயி விட்டோன் (Louis Vuitton) பைகள், ஹோட்டல் நுழைவு அனுமதி அட்டைகள் (access cards) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்,” என்று அவர் சனிக்கிழமை (ஜூலை 5) அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசியக் குற்றவியல் சட்டப் பிரிவு 498Bக்குக்கீழ் அப்பெண்கள் மீது விசாரணை நடத்துவதற்கான ஆவணங்கள் தயார்செய்யப்பட்டுள்ளளன. அவர்கள் இம்மாதம் ஒன்பதாம் தேதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
போலிப் பணத்தாள்கள் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மலேசிய மத்திய வங்கிக் காவல்துறையிடம் தெரியப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.