சோல்: தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெற்று வந்த வருடாந்தர ஏபெக் உச்சநிலை மாநாடு சனிக்கிழமையன்று (நவம்பர் 1) நிறைவடைந்தது.
வளர்ந்து வரும் உலகளாவிய சூழலை வழிநடத்தவும், வளர்ச்சியின் நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஏபெக் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்தக் கூட்டறிக்கை கடைசி நிமிடத்தில் உறுதிசெய்யப்பட்டதாக மாநாட்டின் நிறைவைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் கூறினார்.
மேலும், வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த சில அம்சங்களில் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வழக்கமாக, ஏபெக் மாநாட்டின் நிறைவில் வெளியிடப்படும் அறிவிப்புகளில் விதிகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பு, உலக வர்த்தக நிறுவனம் ஆகியவற்றைப் பற்றிய சில குறிப்புகள் இருக்கும்.
ஆனால், இவ்வாண்டு வெளியான அறிக்கையில் அதுகுறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீடித்துவந்த வர்த்தகப் பதற்றம் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நடத்திய சந்திப்புக்குப் பிறகு சற்று தணிந்தது.
பூசானில் அக்டோபர் 30ஆம் தேதி நடந்த அந்தச் சந்திப்பு, தென்கொரியா ஏபெக் கூட்டங்களை நடத்துவதை மேலும் சவாலானதாக மாற்றியது.
தொடர்புடைய செய்திகள்
பெரும்பாலான உலகத் தலைவர்களை ஒன்றிணைத்த இந்த மாநாட்டை நடத்த தென்கொரியாவில் ஜூன் மாதம் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்திற்கு வெறும் நான்கு மாதங்கள்தான் இருந்தன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் கொரியாவின் மரபுடைமையைத் தாங்கி வாழும் அரும்பொருளகமாக விளங்கும் கியோங்ஜுவில் நடந்த இம்மாநாட்டைச் சிறப்பாக நடத்த தேவையான வசதிகள், தலைவர்கள் தங்கும் இடங்கள் ஆகியவற்றை மேம்படுத்தப் பெரிய அளவில் தென்கொரிய அரசு முதலீடு செய்ததாகவும் திரு லீ கூறினார்.
மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூட்டங்கள் ஏற்பாடு செய்ததில் தென்கொரியா சிறப்பாகச் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

