ர‌ஷ்யாவை மிரட்டும் அமெரிக்கா: சீனா, இந்தியா பாதிக்கப்படலாம்

2 mins read
5304f2a4-2f9a-44fb-a247-14e34dd2c214
அமெரிக்கா ர‌ஷ்யாமீது இரண்டாவது வரி விதித்தால் இந்தியாவும் சீனாவும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூரு/ பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ர‌ஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு விதிக்கப்போகும் வரியை 100 விழுக்காடாக்கினால் சீனாவும் இந்தியாவும் அடி வாங்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உக்ரேனின் போர்நிறுத்த உடன்பாடு குறித்து ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் 50 நாள்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் இரண்டாவது வரிகள் விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் எச்சரித்தார்.

2022ஆம் ஆண்டு உக்ரேன்மீது படையெடுத்ததற்காக ர‌ஷ்யாமீது மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ர‌ஷ்யா ஒவ்வொரு நாளும் ஏழு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை அனுப்பிவைக்கிறது. ர‌ஷ்யாவிடமிருந்து ஆக அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடுகள் சீனா, இந்தியா.

திரு டிரம்ப்பின் மிரட்டல் ர‌ஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரப் போரை இன்னும் மோசமாக்கக்கூடும். அனைத்துலக எரிசக்தி விலைகளும் கணிசமாகக் கூடும்.

“அனைத்துலக கச்சா எண்ணெய்ச் சந்தையில் நினைப்பதைவிட இரண்டாவது வரிகள் அதிக சிக்கலை ஏற்படுத்தக்கூடும். வர்த்தகத் தடைகள் சம்பந்தப்பட்ட நாட்டை மட்டும் தான் பாதிக்கும். ஆனால் வரிகள் சம்பந்தப்பட்ட நாட்டிலிருந்து பொருள்கள் வாங்கும் நாடுகளைப் பாதிக்கும்,” என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

திரு டிரம்ப்பின் அச்சுறுத்தல் ஒரு வற்புறுத்தல் என்று சீனா தள்ளிவிட்டது. ர‌ஷ்யா அது ஒரு நாடகம் என்று சொன்னது. இந்தியா மட்டும் வர்த்தக வரிகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

ர‌ஷ்யாமீதும் அதன் வர்த்தகப் பங்காளி நாடுகள்மீதும் இரண்டாவது வரிகளைத் திரு டிரம்ப் விதித்தால் கச்சா எண்ணெய்ச் சந்தையில் அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.

டிசம்பர் 2022ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 2025ஆம் ஆண்டு வரை சீனாவும் இந்தியாவும் முறையே 47 விழுக்காடு, 38 விழுக்காடு கச்சா எண்ணெயை ர‌ஷ்யாவிடமிருந்து வாங்கின.

ர‌ஷ்ய - உக்ரேன் போர் தொடங்கியதை அடுத்து சீனா ர‌ஷ்யாவிடமிருந்து ஒவ்வொரு நாளும் 1 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெயை வாங்கியது.

இந்தியாவின் இறக்குமதி கடந்த ஆண்டு துரிதமாக வளர்ந்தது. ஜூன் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 2.08 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ர‌ஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஜூலை 2024இல் அது உச்சத்தைத் தொட்டது.

குறிப்புச் சொற்கள்