அமெரிக்காவுக்கு வெளிநாட்டுத் திறனாளர்கள் தேவை: டிரம்ப்

2 mins read
4cc85b58-0836-4743-8293-b2d56ffc4789
இவ்வாண்டு (2025) அமெரிக்க நிர்வாகம், எச்-1பி விசாவுக்கு 100,000 அமெரிக்க டாலர் விண்ணப்பக் கட்டணத்தை நிர்ணயித்ததைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப்பின் அண்மைக் கருத்துகள் வந்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து திறனாளர்கள் தேவை என்று அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். அத்தகைய ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்குச் சேர்ப்பதற்கான விசா நடைமுறைகளைக் கடுமையாக்க அவரது நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் திரு டிரம்ப்பின் கருத்து வந்துள்ளது.

ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் நிகழ்ச்சி நெறியாளர் லாரா இங்ரஹம், திறனாளர்களுக்கான எச்-1பி விசாவுக்குத் திரு டிரம்ப்பின் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்காதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்தகைய விசாக்கள், அமெரிக்க ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அவரின் இலக்கை எட்டுவதற்குச் சிரமத்தைக் கொடுக்கும் என்றார் திருவாட்டி இங்ரஹம்.

“திறனாளர்களைக் கொண்டுவரவும் வேண்டும்,” என்றார் திரு டிரம்ப்.

அமெரிக்காவில் ஏற்கெனவே ஏராளமான திறனாளர்கள் இருப்பதாகத் திருவாட்டி இங்ரஹம் வாதிட்டார். அதற்கு, ‘இல்லை’ என்று பதிலளித்தார் அமெரிக்க அதிபர்.

சில வகையான திறனாளர்கள் அமெரிக்காவில் இல்லை என்றார் அவர்.

இவ்வாண்டு திரு டிரம்ப்பின் நிர்வாகம், எச்-1பி விசாவுக்கு 100,000 அமெரிக்க டாலர் ($130,000) விண்ணப்பக் கட்டணத்தை நிர்ணயித்தது. அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள், குறிப்பாகத் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை வேலைக்கு எடுக்க எச்-1பி விசாக்களைப் பரவலாகப் பயன்படுத்துகின்றன.

திரு டிரம்ப்பின் நிர்வாகம், கொள்கையை மாற்றியதைத் தொடர்ந்து அமெரிக்க வர்த்தகச் சம்மேளனம் வழக்கு தொடுத்தது. திரு டிரம்ப்பின் குடிநுழைவுக் கொள்கைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையிலான மோதலை அது வெளிப்படுத்தியது.

திரு டிரம்ப், இரண்டாம் முறையாக அதிபர் பதவியேற்றதும் முறையான ஆவணமின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். அதற்காகக் குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்கு உதவப் பெரிய நகரங்களுக்குப் படைவீரர்களை அவர் அனுப்பியிருக்கிறார். வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வெளிநாட்டு மாணவர்கள் வேலை விசா பெறுவதற்கு ஆதரவு வழங்குவதில் நிறுவனங்கள் இப்போது அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் அத்தகைய முறையின் மூலம்தான் நிறுவனங்களில் சேர்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்