ஆற்றல் பானத்தில் மது கலப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

1 mins read
8528db94-4f6b-4fe8-82e8-d12eaf34331f
செல்சியஸ் ஆஸ்ட்ரோ வைப் பானக் கலன்களில் தவறுதலாக வோட்கா நிரப்பப்பட்டது. - படம்: அமெரிக்க உணவு, மருந்து அமைப்பு

வாஷிங்டன்: ஆற்றல் பானத்தில் தவறுதலாக மது கலக்கப்பட்டதை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செல்சியஸ் என்ற அந்த பானத்தின் ‘ஆஸ்ட்ரோ வைப் புளூ ராஸ்’ பதிப்பில் வோட்கா கலக்கப்பட்டதாக அமெரிக்க உணவு, மருந்து அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதியாக்க நிறுவனம் ஒன்று செல்சியஸ் பானத்தின் காலிக் கலன்களைக் கவனக்குறைவாக ‘ஹை நூன்’ எனும் வோட்கா நிறுவனத்திற்கு அனுப்பியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அக்கலன்களில் வோட்கா நிரப்பப்பட்டதை அடுத்து, அதே ஆலையில் தயாரிக்கப்பட்ட தனது ‘பீச் வெரைட்டி’ பானப் பொதிகளில் சிலவற்றையும் ஹை நூன் நிறுவனம் திரும்பப் பெற்று வருகிறது.

இந்தக் கவனக்குறைவு காரணமாக பாதிப்பு நிகழ்ந்ததாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று அமெரிக்க உணவு, மருந்து அமைப்பு கூறியது.

மதுபானம் நிரப்பப்பட்ட ஆற்றல் பானக் கலன்களின் குறியீடுகள் உள்ளிட்ட விவரங்கள் அமைப்பின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஜூலை 21 முதல் 23ஆம் தேதிக்குள் ஃபுளோரிடா, நியூயார்க், ஒகையோ, தெற்கு கரோலினா, வெர்ஜீனியா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறிப்பிட்ட குறியீடுகளைக் கொண்ட செல்சியஸ் ஆற்றல் பானங்களை அருந்த வேண்டாம் என்று பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்