ஈரானின் அணுசக்தித் தளங்களை அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து விமான நிறுவனங்கள், மத்திய கிழக்கில் உள்ள பெரும்பகுதிகளைத் தவிர்க்க முற்படுகின்றன.
அங்கு நடக்கும் இருபக்க ஏவுகணைப் பாய்ச்சல்களால் விமானச் சேவை நிறுவனங்கள் மத்திய கிழக்கின் பெரும்பகுதி வான்வெளியைத் தவிர்க்க முற்படுகின்றன.
ஈரானின் அணுசக்தித் தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த வாரம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க அந்த வட்டாரத்திலுள்ள விமானச் சேவை நிறுவனங்கள் வான்வெளியைத் தவிர்த்து வருகின்றன என்று ‘ஃப்ளைட்ரேடார்24’ விமானப் போக்குவரத்துக் கண்காணிப்புத் தளம் தெரிவித்தது.
ஈரான், ஈராக், சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளியில் விமானப் போக்குவரத்து இல்லை என ‘ஃப்ளைட்ரேடார்24’ தளம் காண்பிக்கிறது.
கேஸ்பியன் கடல் வழியே வடக்குமுகமாக அல்லது எகிப்து, சவூதி அரேபியா வழியே தெற்குமுகமாக விமானங்கள் செல்கின்றன. இதனால் பயண நேரம் கூடுதலாக நீள்வதுடன் எரிபொருள், பணியாளர் செலவும் அதிகரிக்கின்றன.
பதற்றமிக்க வட்டாரங்களில் ஏவுகணைகளை, ஆளில்லா வானுர்தி ஆகியவற்றால் விமானப் போக்குவரத்திற்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
ஜூன் 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விமான நிறுவனங்கள் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது.
இருந்தபோதும் பக்கத்து நாடுகளிலிருந்து அவர்களது குடிமக்களை வெளியேற்றும் சேவைகள் இயங்கி வருகின்றன. வேறு சில சேவைகள், ஈரானில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களை அவர்களது நாடுகளுக்குக் கொண்டுவரவுள்ளன.