உள்ளூர் வணிகர்கள்மூலம் உதவிப் பொருள்களை அனுப்ப இஸ்ரேல் திட்டம்

காஸாவுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் உதவிகள் அனுமதிக்கப்படும்

2 mins read
c879aad6-346d-4955-ad28-9ab17a8c2e52
உதவிப் பொருள்கள் நிரம்பிய 600 கனரக வாகனங்களைப் போருக்கு முன் இஸ்ரேல் காஸாவுக்குள் அனுமதித்தது. - படம்: ஏஎஃப்பி

காஸா: இஸ்ரேல், உள்ளூர் வணிகர்கள் மூலம் கட்டங்கட்டமாக, கட்டுப்பாட்டுடன் நிவாரணப் பொருள்களைக் காஸாவுக்குள் அனுமதிக்கும் என்று நிவாரணங்களை நிர்வகிக்கும் கோகேட் (COGAT) எனும் இஸ்ரேலிய ராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.

“காஸா வட்டாரத்துக்குள் கொண்டுவரப்படும் நிவாரணப் பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு ஐக்கிய நாட்டு நிறுவனம், அனைத்துலக அமைப்புகள் ஆகியவை மீது சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள திட்டமிடப்படுகிறது,” என்று அமைப்பு சொன்னது.

இஸ்ரேல் ஒருசில நிபந்தனைகளைப் பூர்த்திசெய்தால் காஸாவில் பிடித்துவைத்திருக்கும் பிணையாளிகளுக்கு உதவிப் பொருள்களை விநியோகம் செய்ய செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஒத்துழைக்கத் தயார் என்று ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) குறிப்பிட்டது.

காஸாவில் உள்ள மனிதநேயத் தேவைகளை நிறைவேற்ற காஸாவுக்குள் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 600 கனரக வாகனங்களில் உதவிப் பொருள்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். போர் தொடங்குவதற்கு முன் அந்த எண்ணிக்கையிலான நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் காஸாவுக்குள் அனுமதித்திருந்தது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலை அடுத்து ஹமாஸ் தரப்பு 251 பேரைப் பிணைபிடித்துச் சென்றது. அந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாகக் காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸாவில் தற்போது 50 பிணையாளிகள் மட்டும் எஞ்சியிருப்பதாகவும் அவர்களில் கிட்டத்தட்ட 20 பேர் மட்டும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

பிணையாளிகளைச் சந்திக்க முடியாதபடி ஹமாஸ் மனிதநேய அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்இஸ்‌ரேல்நிவாரணம்உதவி