ரோம்: இவ்வாரம் தொண்டூழிய அமைப்புகள் காஸாவுக்குச் சிறு படகுகள்மூலம் உதவிப் பொருள்களை எடுத்துச் சென்றபோது தடுத்த நிறுத்தப்பட்டன.
இஸ்ரேலிய ராணுவம் அமைத்த தடுப்புகளைத் தாண்டி அச்சிறு படகுகள் உதவிப்பொருள்களோடு நுழையும்போது பிரச்சினை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 40 படகுகளை இஸ்ரேலிய ராணுவம் சோதனையிட்டன. மேலும் அதில் இருந்த 400க்கும் அதிகமான வெளிநாட்டு ஆர்வலர்களை இஸ்ரேலிய ராணுவம் தடுத்துவைத்தது.
இதனால் உலக அளவில் இஸ்ரேலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை (அக்டோபர் 2) ஐரோப்பாவில் வாழும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். கடைகள் மற்றும் பொதுச் சொத்துகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
பார்சிலோனாவின் கடைகள் மற்றும் உணவகங்கள் சூறையாடப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் சாயங்கள் கொண்டு சுவர்களில் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களை எழுதினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘ஸ்டார் பக்ஸ்’, ‘பர்கர் கிங்’, ‘கேர்ஃபோர்’ பேரங்காடிகள் உள்ளிட்ட பிரபலக் கடைகளையும் விட்டுவைக்கவில்லை.
இத்தாலியின் மிலான், ரோம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
டூரின் நகரில் சாலைகளைப் போராட்டக்காரர்கள் முடக்கினர்.
ரோமில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறை சார்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
காஸாவில் மாண்ட சுகாதார ஊழியர்களின் பெயர்களைப் படித்தவாறு அவர்கள் போராட்டம் நடத்தினர். காஸாவில் 1,677க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டங்களை இத்தாலிய தற்காப்பு அமைச்சு கண்டித்தது. இது பொது மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் தருவதாக அது குறிப்பிட்டது.
டப்லின், பாரிஸ், பெர்லின், ஜெனீவா உள்ளிட்ட ஐரோப்பாவின் பல முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
ஆர்ஜென்டீனா, மெக்சிகோ, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
துருக்கியன் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், தடுத்துவைக்கப்பட்ட உதவிப் படகுகள் சைப்ரஸ் நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

