பேங்காக்: ஆள்கடத்தலை மையமாக வைத்து இயங்கும் மோசடி நிலையங்கள் உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றன.
அத்தகைய மோசடி நிலையங்களின் செயல்பாடு தென்கிழக்காசியாவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவிவருவதாக இன்டர்போல் எனும் அனைத்துலகக் காவல்துறை தெரிவித்துள்ளது. குறைந்தது 66 நாடுகளைச் சேர்ந்தோர் ஆள்கடத்தலுக்கு ஆளாயினர், வலுக்கட்டாயமாக இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்ய வைக்கப்பட்டனர் என்று கடந்த மார்ச் மாதத்துக்கான அறிக்கையில் இன்டர்போல் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்டோரில் 74 விழுக்காட்டினர் தென்கிழக்காசியாவில் உள்ள மோசடி ‘மையங்களுக்கு’ கொண்டு செல்லப்பட்டனர். மற்ற நாடுகளிலும் மோசடி நிலையங்கள் தலைதூக்குகின்றன. மேற்கு ஆப்பிரிக்க வட்டாரம் இத்தகைய குற்றங்கள் அதிகம் நிகழக்கூடிய பகுதியாக உருவெடுத்துவருகிறது.
மறுப்பு தெரிவிப்போர் பல வேளைகளில் மிரட்டப்படுகின்றனர். சிலர் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.
பல்வேறு நாடுகளின் காவல்துறையினருடன் சேர்ந்து இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆள்கடத்தல், பிறரை வலுக்கட்டாயமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தல் ஆகிய பல குற்றச் செயல்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, 2024ஆம் ஆண்டு அதிகாரிகள் பிலிப்பீன்சில் உள்ள பெரிய மோசடி நிலையம் ஒன்றில் சோதனை நடத்தினர். அதேபோல், நமிபியாவில் செயல்பட்டுவந்த மோசடி நிலையம் ஒன்று அகற்றப்பட்டது. அந்நிலையத்தில் 88 இளையர்கள் வலுக்கட்டாயமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விசாரணைக்காக காவல்துறையினர் 163 கணினிகளையும் 350 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனர்.
பிறரை வலுக்கட்டாயமாகப் பணியில் ஈடுபடுத்துவது, திட்டமிட்டு ஏமாற்றுவது ஆகியவற்றைத் தாண்டி குற்றவாளிகள் செயற்கை நுண்ணறிவையும் (ஏஐ) பயன்படுத்துவதாக இன்டர்போல் எச்சரிக்கிறது. மிகவும் நம்பகமாகத் தென்படும் வேலை விளம்பரங்களை உருவாக்குவது, டீப்ஃபேக் எனும் வன்போலி வாயிலாக பல்வேறு மோசடிகளுக்கு மக்களை ஈர்ப்பது போன்ற செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. காதல் மோசடிகள், பாலியல் மோசடிகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற மோசடிக் குற்றங்களை மேற்கொள்வோரில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் ஆண்கள் என்றும் 61 விழுக்காட்டினர் 20லிருந்து 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இன்டர்போலின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.