ஹனோய்: வியட்னாம் ஜூலை மாதத்திலிருந்து எட்டுவிதமான குற்றங்களுக்குரிய மரண தண்டனையை அகற்றவிருக்கிறது.
அவற்றுள் சொத்து அபகரிப்பு, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்றும் அரசு ஊடகம் (ஜூன் 25) சொன்னது.
வியட்னாம் நாடாளுமன்றம் ஒருமனதாக எட்டு குற்றங்களுக்கான மரண தண்டனையைக் குற்றவியல் சட்டத்தில் திருத்தி எழுதியதாக அதிகாரத்துவ வியட்னாம் செய்தி நிறுவனம் சொன்னது.
அரசாங்கச் சொத்துகளைச் சேதப்படுத்தியது, போலியான மருந்துகளைத் தயாரித்தது, அமைதியைக் குலைக்க முயன்றது, போரைத் தொடங்க காரணமாக இருந்தது, வேவுப் பார்த்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களுக்காக வியட்னாமில் இனி மரண தண்டனை விதிக்கப்படாது.
அத்தகைய குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை இனி ஆயுள் தண்டைனையாக இருக்கும்.
பட்டியலிடப்பட்ட குற்றங்களுக்காக ஜூலை 1ஆம் தேதிக்கு முன் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தோரின் தீர்ப்புகள் ஆயுள் தண்டனையாக மாற்றப்படும்.
இருப்பினும் பத்து குற்றங்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்படும் என்று வியட்னாம் சொன்னது.
கொலை, தேசத் துரோகம், பயங்கரவாதம், பிள்ளைகள் மீதான பாலியல் வன்கொடுமை ஆகியவை அவற்றுள் சில குற்றங்கள்.
தொடர்புடைய செய்திகள்
மரண தண்டனை எதிர்கொள்வோர் குறித்த விவரங்கள் வியட்னாமில் அரசாங்க ரகசியமாகக் கருதப்படுகின்றன. எனவே எத்தனை பேர் தற்போது மரண தண்டனை எதிர்கொள்கின்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மரணதை விளைவிக்கக்கூடிய ஊசிகள் மூலம் வியட்னாமில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
இதற்குமுன் அங்குத் துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறை 2011ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது.