பெரு தலைநகரில் 30 நாள் அவசரநிலை

1 mins read
21db10ef-21ec-4ef2-a946-d413c1c46b9d
புதிய பெரு அதிபர் ஜேசே ஜெரி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லிமா: பெரு தலைநகர் லிமாவிலும் அந்நாட்டின் கல்லாவ் மாநிலத்திலும் 30 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் குற்றச் செயல்களைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெரு அதிபர் ஜோசே ஜெரி தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அந்த ஆர்ப்பாட்டங்களில் ஒருவர் கொல்லப்பட்டார், 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) நள்ளிரவில் அவசரநிலை நடப்புக்கு வந்ததாக திரு ஜெரி கூறினார். அமைச்சர்கள் குழு இந்நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் சொன்னார்.

இதன்படி காவல்துறையுடன் சேர்ந்து ஆயுதப் படைகளைப் பணியில் ஈடுபடுத்த அதிகாரம் உள்ளது. திரு ஜெரி மேல்விவரம் ஏதும் தரவில்லை.

“குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளில் முன்னின்றுப் போராடும் அணுகுமுறைக்கு மாறுகிறோம். இதன் மூலம் அமைதி, மில்லியன்கணக்கான பெருவியர்களின் நம்பிக்கை ஆகியவற்றை நாம் மறுபடியும் பெற முடியும்,” என்று திரு ஜெரி தொலைக்காட்சி உரையில் விவரித்தார்.

திரு ஜெரி, இம்மாதம் பெரு அதிபராகப் பொறுப்பேற்றார். முந்தைய அதிபர் டினா பொலுவார்ட்டே பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு திரு ஜெரி பொறுப்பேற்றார்.

சென்ற வாரம் அவர் தமது புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார். குற்றச் செயல்களைக் கையாள்வதற்கு முன்னுரிமை வழங்கப்போவதாக திரு ஜெரி உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்